Home செய்திகள் உலக செய்திகள் பாரிஸ் அருகே துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

பாரிஸ் அருகே துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

பாரிஸ், அக். 24-
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே, ஓடும் காரில் இருந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு காரில் தப்பிச் செல்ல முயன்ற அந்த நபரை போலீசார் விரட்டிச் சென்று சுற்றிவளைத்து கைது செய்தனர்.
பாரிஸ் அருகிலுள்ள லா வெரியர் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சாலையோரமாகச் சென்று கொண்டிருந்த பொதுமக்களை நோக்கி திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குண்டு பாய்ந்து ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், சம்பவத்துக்குப் பிறகு காரில் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார்.
அவரை போலீசார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
எனினும், துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை. இச்சம்பவத்துக்கு பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார். பிரான்சில் ஏற்கெனவே விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டங்களும் பதற்றமான சூழலும் நிலவி வரும் நிலையில், பாரிஸ் அருகே நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.