Home மாவட்டங்கள் சென்னை பார்த்தசாரதி கோயிலில் நிர்வாக பிரசாத விற்பனை

பார்த்தசாரதி கோயிலில் நிர்வாக பிரசாத விற்பனை

சென்னை, அக். 24-
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில், கோயில் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்படும் பிரசாதங்களை பக்தர்களுக்கு வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின்போது, கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வது, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, அன்னதானத் திட்டத்தை விரிவுபடுத்துவது, கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அப்போது, தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பிரசாதங்களுக்கு மாற்றாக, முதுநிலைக் கோயில்களின் வளாகத்திலேயே கோயில் நிர்வாகம் மூலம் பிரசாதங்கள் தயாரித்து பக்தர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரமேஷ் அறிவித்திருந்தார்.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில், கோவை மாவட்டம் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயில் உள்ளிட்ட 37 முதுநிலைக் கோயில்களில், கோயில் நிர்வாகம் மூலம் தரமான பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் ரமேஷ் கலந்து கொண்டு, கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு லட்டு, புளியோதரை, அதிரசம், மிளகுவடை, தேன்குழல் உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினார்.