Home செய்திகள் உலக செய்திகள் பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகள்

பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகள்

கிரேட்டர் நொய்டா, செப். 26- உள்நாட்டில் தயாரிக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானுக்குத் தூக்கமில்லாத இரவுகளை வழங்கி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்தார். உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற சர்வதேச வர்த்தகக் கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது: பாதுகாப்புத் துறைக்குத் தேவையான கருவிகள், தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களைத் தயாரிப்பதில் இந்தியா தற்சார்பு நிலையை நோக்கி முன்னேறி வருகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானுக்குத் தூக்கமில்லாத இரவுகளை அளித்து வருகின்றன. நாட்டின் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய மாற்றம் நல்ல அறிகுறியாகும். உத்தரபிரதேச மாநிலம், குறிப்பாக அமேதியில் தயாரிக்கப்படும் ஏகே-203 ரக துப்பாக்கிகள், நக்சலைட்டுகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு தூக்கமில்லாத இரவுகளை ஏற்படுத்தியுள்ளன. பாதுகாப்பு உற்பத்தித் துறையில் நாட்டின் தற்சார்பு வளர்ந்து வருவதன் வெளிப்பாடாக இதை பார்க்கலாம். உத்தரபிரதேசத்தில் உள்ள ஜான்சி, சித்ரகூட், லக்னோ, ஆக்ரா, அலிகர் மற்றும் கான்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு முதலீடுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. உலகளவில் பல்வேறு சூழல்கள் நிலவி வரும் நிலையில், இந்தியா தனது பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளது. ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதாரக் கொள்கைகளே காரணம். பாரபட்சமான பார்வை கொண்டவர்களால் இந்தியாவின் முன்னேற்றத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பல்வேறு நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் ஏற்றுமதி திறன் பன்மடங்கு அதிகரித்துள்ளது.