
புதுடில்லி, செப். 27-
புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு, அது செயல்படத் தொடங்கியுள்ளது. இந்தக் கட்டடத்தின் முக்கிய நுழைவாயிலுக்கு ‘மகர துவார்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மழைக்காலக் கூட்டத்தொடரின்போது டில்லியில் கனமழை பெய்ததால், மகர துவார் நுழைவாயில் முன்பு குளம்போல் மழைநீர் தேங்கியது. இதனால், அந்த நீரில் கால் வைத்துத்தான் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், எம்.பி.க்கள் வெளியே செல்ல தயங்கினர்.மேலும், நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் செல்ல முயன்ற எம்.பி.க்கள் மழையில் நனைய வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இதையடுத்து, எம்.பி.க்கள் மழையில் நனையாமல் கட்டடத்துக்குள் செல்லும் வகையில், ஊழியர்கள் குடைகளைப் பயன்படுத்தி அவர்களை அழைத்துச் சென்றனர். இதற்காக அப்போது 400 குடைகள் வாங்கப்பட்டன. சுமார் ரூ.1,200 கோடியில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டடம் மோசமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மழைநீர் தேங்கியதுடன், நுழைவாயிலில் மழையிலிருந்து பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதையும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின. இந்தக் குறையைப் போக்க, சபாநாயகர் ஓம் பிர்லா, கட்டட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி புதிய திட்டத்தைத் தயாரித்தார். அதன்படி, நாடாளுமன்றத்தின் முக்கிய நுழைவாயிலான மகர துவார் முன்பு, போர்ட்டிகோ போன்ற அமைப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. இதன் மூலம், எம்.பி.க்களுக்கு வெயில் மற்றும் மழைக்காலங்களில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க முடியும் எனத் திட்டமிடப்பட்டது.













