
புதுடில்லி, செப். 16- பயங்கரவாதி மசூத் அசார் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையை உயர்த்துவதாகக் கூறி, பாகிஸ்தான் தந்திரம் செய்து அனைவரையும் ஏமாற்றுகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியும், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் நிறுவனருமான மசூத் அசார் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.24 லட்சம் பரிசு வழங்கப்படும் என, சன்மானத்தை உயர்த்தி பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: பாகிஸ்தான் இதுபோன்ற தந்திரங்களையும், மக்களை ஏமாற்றும் முயற்சிகளையும் மேற்கொள்வது புதிதல்ல. கடந்த காலங்களிலும் இதுபோன்ற தந்திரங்களைப் பார்த்திருக்கிறோம். பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடு வெளியிடும் இதுபோன்ற அறிவிப்புகள் அனைத்தும் போலியானவை என்பது அனைவருக்கும் தெரியும். எந்தப் பலனும் இல்லாத அறிவிப்புகளை மட்டும் வெளியிடாமல், பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மலேஷியாவில் இருக்கும் சர்ச்சைக்குரிய மதப் போதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு அழைத்து வரும் விவகாரம் குறித்து, அந்நாட்டு அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றும் ரந்தீர் ஜெயிஸ்வால் தெரிவித்தார். பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே, சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சர்வதேச மற்றும் பிராந்தியப் பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். ஹவுதி பயங்கரவாதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சமீபத்தில் சவுதி அரேபியா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. செங்கடல் பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். சவுதியின் இறையாண்மை மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டிக்கிறோம். இத்தகைய தாக்குதல்கள் பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பாதிப்பதுடன், சுதந்திரமான கடல் போக்குவரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இப்பிராந்தியத்தில் விரைவில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவ வேண்டும் என்றார்.














