
இம்பால், செப். 15–-
மணிப்பூரில் மீண்டும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. தமன்லாங் மற்றும் நோனி மாவட்டங்களில் கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நாகா பயங்கரவாதிகள், 2 பெண்கள் உள்பட 4 பேரைக் கொலை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் ஆயுதக் குழுக்களின் தொடர்ச்சியான செயல்பாடுகள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு குகி-சோ கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மணிப்பூரை இந்த ஆண்டு முழுவதும் நாகா ஆயுதக் குழுக்கள்தான் இயக்கி வருவதாக குகி-சோ கவுன்சில் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்த ஆண்டு மட்டும் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 22 குகி பழங்குடியின மக்கள் அந்தக் கும்பலால் கொல்லப்பட்டதாகவும் அந்தக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக குகி-சோ கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து, மணிப்பூரில் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயுதக் குழுக்களின் தொடர்ச்சியான செயல்பாடு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன், மணிப்பூரை மற்றொரு முழு அளவிலான மோதலை நோக்கித் தள்ளும் அபாயத்தையும் கொண்டுள்ளது” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.













