மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்வு

புதுடெல்லி: மார்ச் 8:
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 1 கோடி பேர் பயனடைவர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி 46 சதவீதமாக இருந்து வந்தது. தற்போது 4 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், மொத்த அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டு ஜனவரி 1 முதல் இது கணக்கிட்டு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், “விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்கிறது. இதன்மூலம், நாடுமுழுவதும் உள்ள ஒரு கோடிக்கும்அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்” என்று தெரிவித்தார்.அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் காரணமாக மத்திய அரசுக்கு ஏற்படும் ஒட்டுமொத்தச் செலவு ஆண்டுக்கு ரூ.12,868 கோடியாக இருக்கும். 7-வது மத்திய ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம்ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
உஜ்வாலா மானியம் தொடரும்: பிரதமரின் உஜ்வாலா சமையல் எரிவாயுத் திட்ட பயனாளிகளுக்கு ரூ.300 மானியத்தை தொடர்ந்து அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமரின் உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்ட பயனாளிகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் 14.2 கிலோ அளவிலான 12 சிலிண்டர்களுக்கு ரூ.300 மானியத்தை தொடர்ந்து அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 5 கிலோ சிலிண்டருக்கு அதன் விகிதாசார அளவில் மானியம் வழங்கப்படும். இந்த மானியம் தகுதியான பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான மத்திய அரசின்செலவினம் ரூ.12,000 கோடியாக இருக்கும்.
பிரதமரின் உஜ்வாலா சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டத்தின்கீழ் நடப்பு ஆண்டு மார்ச் 1 -ம் தேதி நிலவரப்படி 10.27 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் உள்ளனர்.