
பெங்களூரு: அக். 9-
கர்நாடக மாநிலத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், ஐஸ்கிரீம் தயாரிப்பு மையங்களில் திடீர் சோதனை நடத்தி தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
பெங்களூரு, மைசூர், ராய்ச்சூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வரும் மொத்தம் 45 ஐஸ்கிரீம் தயாரிப்பு மையங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது, காலாவதியான உணவுப் பொருட்கள் பயன்பாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பெங்களூரு ஜெயநகர் 3-வது பிளாக்கில் உள்ள சாவர் ஐஸ்கிரீம் கஃபே, பிளேகஹள்ளியில் உள்ள என்.என். எண்டர்பிரைசஸ், மைசூரில் உள்ள ஜான் கேண்டி ஐஸ்கிரீம் தயாரிப்பு மையம் மற்றும் ராய்ச்சூரில் உள்ள ஜெமினி ஐஸ்கிரீம் தயாரிப்பு மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
70 மாதிரிகள் சேகரிப்பு:
சோதனையின் போது ஐஸ்கிரீம், பால், பால் பவுடர், சுவையூட்டும் பொருட்கள் (ஃபிளேவர்ஸ்) மற்றும் சர்க்கரை உள்ளிட்ட மொத்தம் 70 உணவு மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்தனர். இந்த உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அந்த மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
காலாவதியான பால் பறிமுதல்:
ஆய்வின் போது காலாவதியான ஐஸ்கிரீம், பால், பிஸ்கட் மற்றும் தேங்காய் பவுடர் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சில உணவுப் பொருட்களின் பொட்டலங்களில் லேபிள் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை என்பதும் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது.
சேகரிக்கப்பட்ட உணவு மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, அப்பொருட்களின் தரம் குறித்த கூடுதல் தகவல்கள் தெரியவரும். உணவு பாதுகாப்பு விதிமுறை மீறல்கள் மற்றும் தரத்தை பரிசோதிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்பும் தொடர் சோதனை:
கடந்த மாதம் பெங்களூரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 64 பேயிங் கெஸ்ட் (PG) விடுதிகளில் திடீர் சோதனை நடத்தி, அங்குள்ள சுகாதாரம் மற்றும் காலாவதியான உணவுகள் குறித்து ஆய்வு நடத்தினர். அதற்கு முன்னதாக ஓட்டல்கள் மற்றும் உணவகங்களிலும் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டன.
மற்றொரு சம்பவமாக, சிக்மகளூரில் போலி நெய் தயாரிக்கும் கும்பல் ஒன்று சிக்கியது. உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யத் துறை சார்பில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் 45 ஐஸ்கிரீம் தயாரிப்பு மையங்களில் அதிகாரிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.













