
சென்னை, செப். 20- வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்-அமைச்சர் விஜய் நாளை ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் நண்பகல் 12 மணியளவில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு அதிக மழை தரும் காலமாக வடகிழக்கு பருவமழைக் காலம் உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை இந்தப் பருவமழை நிலவுகிறது. மேலும், இந்தக் காலத்தில் ஏற்படும் புயல்களால் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க அரசு ஆண்டுதோறும் பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் விஜய் நாளை (செப். 21) அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், டெல்டா மற்றும் கடலோர மாவட்ட ஆட்சியர்கள் காணொலி வாயிலாகப் பங்கேற்கின்றனர். கூட்டத்தில், மழைக்காலத்துக்கு முன்பாக நீர்நிலைகளைத் தூர்வாருதல், நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பலவீனமான மின்கம்பங்களைச் சீரமைத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்துகிறார்.













