
சென்னை, செப். 26-
சிறுமிகள் தொடர்பான ஜெம் கிரானைட் வீரமணி பாலியல் வழக்கை இருதரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டி அரசியலாக்கக் கூடாது என்றும், அவ்வாறு செய்வது குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுக்கும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.ஜி. திலகவதி அறிவுறுத்தினார். வீரமணிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காமல் முந்தைய திமுக அரசு குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டதாக தமிழக அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர். தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவும் திமுக அரசைக் குற்றம்சாட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது. இதற்கு எதிராக, திமுக பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராக அவதூறான கருத்துகள் வெளியிடத் தடை விதிக்கவும், ரூ.1 கோடியே 1 லட்சம் மானநஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடவும் மனுவில் கோரப்பட்டது. மேலும், திமுக மீது குற்றம்சாட்டி வெளியிடப்பட்ட பதிவுகள் மற்றும் காணொலிகளை நீக்க தவெக, மெட்டா, யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு உத்தரவிடவும் கோரப்பட்டது. கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி புகார் வந்த மறுநாளே திமுக ஆட்சியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், எந்தத் தலையீடும் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மாறாக அவதூறு கருத்துகள் பரப்பப்படுவதாகவும் கூறப்பட்டது. நீதிபதி முன் நடந்த விசாரணையில், திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆஜரானார். அமைச்சர்கள் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்றும், சமூக வலைதளப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டதால் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் வாதிட்டார். சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப். 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். “இந்த விவகாரத்தை இருதரப்பும் இதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். அனைவருக்கும் சமூகப் பொறுப்பு உள்ளது. வழக்கை அரசியலாக்க வேண்டாம்” என்று நீதிபதி அறிவுறுத்தினார்.















