Home செய்திகள் தேசிய செய்திகள் அசாமில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு

அசாமில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு

கவுகாத்தி, ஆகஸ்ட்.6- வடகிழக்கு மாநிலமான அசாமில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் 1.6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நிலைமையின் தீவிரத்தைக் கருதி 14 மாவட்டங்களுக்கு ‘ஹை அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 563 கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதில் சிவசாகர் மாவட்டம் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு மட்டுமே 57,000-க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இதேபோல் கோலாகாட் (34,000 மக்கள்) மற்றும் ஜோர்ஹாட் (25,000 மக்கள்) ஆகிய மாவட்டங்களிலும் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தலைநகர் கவுகாத்தி உட்பட பல நகரப் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, 45 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 12,300-க்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் 59 நிவாரண விநியோக மையங்கள் மூலம் 32,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, உப்பு மற்றும் கால்நடைகளுக்கான தீவனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அசாம் வெள்ள நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். மத்திய அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா புதன்கிழமை வெள்ளப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசுகையில், “வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதம் மிகவும் தீவிரமானது; நிலைமை சீரடைய மேலும் சில காலம் ஆகும்” என்றார்.

மாநிலத்திற்கு கூடுதல் நிதி உதவி வழங்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையை விரைவாகக் கொண்டு சேர்க்கவும் ஏதுவாக, தேசிய பேரிடர் மீட்பு நிதியத்தின் விதிகளைத் தளர்த்துமாறு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, மாநிலத்தில் மேலும் சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், நதிகளில் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வெள்ளம் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.