Home மாவட்டங்கள் பெங்களூர் கர்நாடகத்தில் வரலாறு காணாத வறட்சி:200 தாலுகாக்கள் பாதிப்பு ரூ.39,000 கோடி நஷ்டம்

கர்நாடகத்தில் வரலாறு காணாத வறட்சி:200 தாலுகாக்கள் பாதிப்பு ரூ.39,000 கோடி நஷ்டம்

பெங்களூர்: செப். 23-
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடுமையாக பொய்த்ததால் பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் சுமார் 200 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு, ரூ.39,000 கோடி அளவிற்கு பிரம்மாண்டமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் (அமைச்சர்) டாக்டர் ஜி.பரமேஷ்வர் சட்ட மேலவையில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் வறட்சி நிலைமை குறித்துப் பேசிய அமைச்சர் பரமேஷ்வர், ஏற்கனவே வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட தாலுகாக்களுடன், மேலும் 53 தாலுகாக்கள் புதிதாக சேர்க்கப்படுகின்றன என்றும், இதன் மூலம் வறட்சி பாதிக்கப்பட்ட தாலுகாக்களின் எண்ணிக்கை 177 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார். இன்னும் ஓரிரு நாட்களில் மேலும் 25 முதல் 30 தாலுகாக்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டு, மொத்த எண்ணிக்கை 200-ஐ எட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், அரசியல் அழுத்தத்திற்கோ அல்லது யாராவது ராஜினாமா செய்வேன் என்று மிரட்டுவதற்கோ பயந்து ஒரு தாலுகாவை வறட்சிப் பகுதியாக அறிவிக்க முடியாது என்றும், மத்திய அரசின் 2020 வறட்சி மேலாண்மை வழிகாட்டுதலின்படி, மழைப் பற்றாக்குறை, பயிர் சேதம், நிலத்தடி நீர்மட்டம் மற்றும் நீர்நிலைகளின் நிலை ஆகியவற்றை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்தே இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்றும் அதிரடியாகக் கூறினார்.
முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் 101 தாலுகாக்களும், செப்டம்பரில் 23 தாலுகாக்களும் வறட்சிப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. முதல் கட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 101 தாலுகாக்களில் மட்டும் ரூ.18,000 கோடி பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசிடமிருந்து ரூ.3,500 கோடி இடைக்கால நிவாரணம் கோரப்பட்டுள்ளது. பாஜக உறுப்பினர் சி.டி.ரவி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பரமேஷ்வர், புதிய வறட்சிப் பட்டியலில் ‘கதக்’ தாலுகாவும் சேர்க்கப்படும் என்றும், வறட்சி தீவிரத்தை பொறுத்து அடுத்தடுத்த கட்டங்களிலும் புதிய தாலுகாக்கள் சேர்க்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.