
இஸ்லாமாபாத்: செப். 23-
பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாகாணத்தின் பொது சுகாதாரத் துறை அமைச்சராக பசல் ஷாகுர் கான் பதவி வகித்து வருகிறார்.
கடந்த திங்கள்கிழமை தலைநகர் பெஷாவரின் முக்கிய சாலையில் பசல் ஷாகுர் கான் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த ஆயுதமேந்திய நபர்கள் அவரது காரை வழிமறித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அமைச்சரை அடையாளம் தெரியாத கும்பல் கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக பிடிஐ கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், அந்தப் புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசும், பாகிஸ்தான் ராணுவத் தரப்பும் சேர்ந்து அமைச்சர் ஷாகுரைக் கடத்தியிருக்கலாம் என சந்தேகிப்பதாக பிடிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக தங்கள் தரப்பில் சந்தேகம் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள இம்ரான் கானை விடுவிக்கக் கோரி, செப்டம்பர் 27-ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் மிகப்பெரிய பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளதாக பிடிஐ வட்டாரங்கள் கூறியுள்ளன. அந்தப் பேரணியைத் தடுக்கவே தங்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.










