Home மாவட்டங்கள் பெங்களூர் அடுத்தடுத்து விபத்து:கிளீனர் உள்பட 2 பேர் சாவு

அடுத்தடுத்து விபத்து:கிளீனர் உள்பட 2 பேர் சாவு

பெங்களூரு: ஜூன் 29-
பெங்களூரு அருகே நடந்த அடுத்தடுத்த சாலை விபத்துகளில் கார் மற்றும் லாரி மோதி கிளீனர் உள்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் பத்ரிலால் தரியா (வயது 38). இவர் கேண்டர் வேன் ஒன்றில் கிளீனராக வேலை பார்த்து வந்தார். இந்த வேனில் ராஜஸ்தானில் இருந்து பெங்களூரு யஷ்வந்த்பூர் மார்க்கெட்டுக்கு பூண்டு மூடைகளை ஏற்றி வந்தனர். அங்கு பூண்டு மூடைகளை இறக்கிவிட்டு, பின்னர் கோலாருக்குச் சென்று மாம்பழங்களை ஏற்றிக்கொண்டு திரும்பினர்.
தேவனஹள்ளி ராணி கிராஸ் அருகே உள்ள லாகொண்டனஹள்ளி கேட் பகுதியில் வேனை நிறுத்திவிட்டு, டிரைவர் சரீப் முகமது மற்றும் கிளீனர் பத்ரிலால் ஆகிய இருவரும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். இரவு 8.45 மணி அளவில் பத்ரிலால் டீ குடித்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு, தேசிய நெடுஞ்சாலை-44-ஐ கடக்க முயன்றார்.
அப்போது பெங்களூரு நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று, பத்ரிலால் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை, டிரைவர் சரீப் முகமது மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பத்ரிலால் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தேவனஹள்ளி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் எலக்ட்ரானிக் சிட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மற்றொரு விபத்து நடந்தது. லாரி டிரைவரான ராமராஜு (50) என்பவர் அதிகாலை 3 மணி அளவில் தும்கூர் நைஸ் ரோடு பன்னேருகட்டா திருப்பம் அருகே லாரியை ஓட்டிச் சென்றார்.
அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த கேண்டர் வேன் மீது லாரி எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி அடியோடு நொறுங்கியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி டிரைவர் ராமராஜு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். விபத்தை ஏற்படுத்திய கேண்டர் வேன் நிறுத்தப்படாமல் வேகமாகச் சென்றுவிட்டது. இதுகுறித்து எலக்ட்ரானிக் சிட்டி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.