
ஹைதராபாத், ஜூன் 29-
வயிற்றில் வளரும் குழந்தையின் கற்பை சந்தேகித்து, டி.என்.ஏ சோதனை நடத்தக்கோரி கணவனும், மாமியாரும் கொடுத்த கொடூர டார்ச்சரால், மனமுடைந்த 5 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் மேடக் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது
மேடக் மாவட்டம் அல்லாதுர்க் அடுத்த கடிபெத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுஷ்மிதா (23). இவருக்கும் ஜி.அபிலாஷ் என்பவருக்கும் கடந்த 18 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. தற்போது சுஷ்மிதா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில், சுஷ்மிதாவின் நடத்தையில் கணவன் அபிலாஷுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கும், அவரது தாயாருக்கும் தினமும் நரக வேதனை கொடுத்து வந்துள்ளனர்.
கடந்த ஜூன் 23-ஆம் தேதி சுஷ்மிதாவுக்கு வளைகாப்பு நடத்துவது குறித்து பேசுவதற்காக அவரது தாய் ஜானாபாய், மகள் வீட்டுக்குச் சென்றுள்ளார். இருதரப்பு குடும்பத்தினரும் பேசிக்கொண்டிருந்தபோதே, திடீரென பாய்ந்த கணவன் அபிலாஷ், பயங்கர ரகளையில் ஈடுபட்டுள்ளார். “வயிற்றில் வளரும் குழந்தைக்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தே தீர வேண்டும்” என பிடிவாதம் பிடித்துள்ளார். அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்த போதும், அதன்பின்னரும் சுஷ்மிதாவுக்கு டார்ச்சர் நீடித்துள்ளது.
கணவன் மற்றும் மாமியாரின் தொடர் கொடுமையால் மனமுடைந்த சுஷ்மிதா, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தாய் ஜானாபாய் கொடுத்த புகாரின் பேரில், புதிய சட்டப்பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்த அல்லாதுர்க் போலீசார், கொடூர கணவன் அபிலாஷ் மற்றும் அவரது தாயாரை அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்தனர்


















