Home மாவட்டங்கள் பெங்களூர் சித்ரதுர்கா அருகே சிறுத்தை சிக்கியது

சித்ரதுர்கா அருகே சிறுத்தை சிக்கியது

சித்ரதுர்கா, ஜூன் 29-
சித்ரதுர்கா நகரின் புறநகப் பகுதியான கொடபனஹால் கிராமத்தில், கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று உலா வந்து பொதுமக்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. கண்ணில் படும் ஆடு, மாடுகளை எல்லாம் கவ்விச் சென்றதால் கிராம மக்கள் கடும் பீதியில் இருந்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு புகார்கள் குவியவே, அதிகாரிகளுக்கும் இது பெரும் தலைவலியாக மாறியது.இந்நிலையில், கொடபனஹால் கிராமத்தில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில் சிறுத்தை பதுங்கியிருப்பதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே வனத்துறை அதிகாரி கோப்யா நாயக் தலைமையில், வன ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று அதிரடி வேட்டையில் இறங்கினர்.தோட்டத்திற்குள் பதுங்கியிருந்த சிறுத்தைக்கு அதிரடியாக மயக்க ஊசி செலுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் சிறுத்தை மயங்கி விழவே, வனத்துறையினர் அதை லாவகமாகப் பிடித்து கூண்டில் அடைத்தனர்.
இந்த பரபரப்பான ஆபரேஷனைப் பார்க்க அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். சிறுத்தை கூண்டில் அடைக்கப்பட்டதை பார்த்த பிறகே, சுற்றியுள்ள கிராம மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். பிடிபட்ட சிறுத்தை, உடனடியாக ஆடுமல்லேஸ்வரா மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக அடைக்கப்பட்டது.