Home செய்திகள் தேசிய செய்திகள் அந்தமான் அருகே நிலநடுக்கம்

அந்தமான் அருகே நிலநடுக்கம்

புதுடெல்லி: அக். 28-
வங்கக்கடலில் அந்தமான் தீவுக்கு அருகே ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் இரவு நேரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவாகியுள்ளது.
அந்தமான் தீவின் டிஜிலிபூர் பகுதியில் இருந்து வடக்கே 121 கிலோமீட்டர் தொலைவில், வங்கக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் அதன் மையம் அமைந்திருந்ததாக நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரவு 10.52 மணியளவில் இந்த அதிர்வு உணரப்பட்டது.
இரவு நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே சிறிது கலக்கம் ஏற்பட்டது. எனினும், நிலநடுக்கத்தின் வீரியம் மிதமான அளவில் மட்டுமே இருந்ததால், நிலப்பரப்பில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கையாக அப்பகுதியை தேசிய நிலநடுக்கவியல் மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.