
பெங்களூரு, அக். 28-
கர்நாடக சட்ட மேலவையின் 2 ஆசிரியர் தொகுதிகள் மற்றும் 2 பட்டதாரி தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக – ஜே.டி.எஸ். கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 4 தொகுதிகளிலும் என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதன் மூலம் ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் முடிவு வரவிருக்கும் தேர்தல்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்று பாஜக மற்றும் ஜே.டி.எஸ். தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
3 அரசியல் கட்சிகளுக்கும் பெரும் கௌரவப் போராட்டமாக இருந்த இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முகபங்கம் அடைந்தனர். மேலவை தேர்தல் வெற்றி கூட்டணி தலைவர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி செய்தி வெளியானதும் பாஜக மற்றும் ஜே.டி.எஸ். தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், கோஷங்களை எழுப்பியும் கொண்டாடினர்.
பெங்களூரு ஆசிரியர் தொகுதியில் ஜே.டி.எஸ். கட்சியின் ஏ.பி. ரங்கநாத், வடகிழக்கு ஆசிரியர் தொகுதியில் பாஜகவின் சசீல் ஜி. நமோஷி, மேற்கு பட்டதாரி தொகுதியில் எஸ்.வி. சங்கனூர் மற்றும் தென்கிழக்கு பட்டதாரி தொகுதியில் பாஜக வேட்பாளர் கே.எம். சுரேஷ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
பெங்களூரு ஆசிரியர் தொகுதி:
பெங்களூரு ஆசிரியர் தொகுதியில் இருந்து சட்ட மேலவைக்கு நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, அதில் ஜே.டி.எஸ். வேட்பாளர் ஏ.பி. ரங்கநாத் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸின் தற்போதைய மேலவை உறுப்பினரான புட்டண்ணாவை எதிர்த்து போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றுள்ளார். ரங்கநாத் 10,810 வாக்குகளையும், புட்டண்ணா 9,902 வாக்குகளையும் பெற்றனர். இதன் மூலம் ரங்கநாத் 908 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி உறுதியானதும் ரங்கநாத்தின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். பின்னர் தேர்தல் அதிகாரி ஆதித்ய அம்லான் பிஸ்வாஸிடமிருந்து வெற்றி சான்றிதழைப் பெற்றுக் கொண்டார். அக்டோபர் 23 அன்று நடைபெற்ற பெங்களூரு ஆசிரியர் தொகுதி தேர்தலில் மொத்தம் உள்ள 27,405 வாக்காளர்களில் 22,468 பேர் வாக்களித்திருந்தனர். இது 81.98 சதவீத பதிவாகும்.
வடகிழக்கு ஆசிரியர் தொகுதி:
வடகிழக்கு ஆசிரியர் தொகுதியில் இருந்து மேலவைக்கு நடைபெற்ற தேர்தலின் முடிவு வெளியாகியுள்ளது. அதில் பாஜக வேட்பாளரும், தற்போதைய மேலவை உறுப்பினருமான சசீல் நமோஷி வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸின் சரணப்பா மட்டூரை எதிர்த்து நமோஷி அபார வெற்றி பதித்துள்ளார். சசீல் ஜி. நமோஷி 15,596 முன்னுரிமை வாக்குகளைப் பெற்றார், சரணப்பா மட்டூர் 12,299 வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் நமோஷி 3,297 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். முடிவு அறிவிக்கப்பட்டதும் பாஜக தொண்டர்கள் வெற்றியைக் கொண்டாடினர்.
மேற்கு பட்டதாரி தொகுதி:
மேற்கு பட்டதாரி தொகுதியில் பாஜக வேட்பாளர் எஸ்.வி. சங்கனூர் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று ஹேட்ரிக் சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் அவர் தொடர்ந்து 3-வது முறையாக மேலவையில் நுழைகிறார். தார்வாடு வேளாண் பல்கலைக்கழக மையத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்திலிருந்தே முன்னிலை வகித்து வந்த சங்கனூர், இறுதி சுற்றிலும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வெற்றி பெற்றார். கடைசி சுற்றில் எண்ணப்பட்ட மொத்தம் 3,690 வாக்குகளில் பாஜகவின் எஸ்.வி. சங்கனூர் 1,791 வாக்குகளைப் பெற்றார், காங்கிரஸ் வேட்பாளர் மோகன் லிம்பிகாய் 1,188 வாக்குகளைப் பெற்றார். மொத்தமாக சங்கனூர் 33,711 வாக்குகளையும், மோகன் லிம்பிகாய் 24,388 வாக்குகளையும் பெற்றனர். மேற்கு பட்டதாரி தொகுதியின் முடிவு பாஜகவுக்கு மற்றொரு முக்கியமான வெற்றியைக் கொண்டு வந்துள்ளது. 3-வது முறையாக இத்தொகுதி வாக்காளர்கள் எஸ்.வி. சங்கனூரை கைபிடித்துள்ளனர். அதிகாரப்பூர்வ வெற்றி அறிவிப்பு வெளியானதும் பாஜக தலைவர்களும் தொண்டர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்கிழக்கு பட்டதாரி தொகுதி:
தென்கிழக்கு பட்டதாரி தொகுதியிலும் பாஜக வேட்பாளர் கே.எம். சுரேஷ், காங்கிரஸ் வேட்பாளர் சசி புலிகுண்டேமட்டிற்கு எதிராக வெற்றி பெற்றுள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப் போட்டியில், காங்கிரஸ் வேட்பாளர் சசி புலிகுண்டேவை 23,098 வாக்குகள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்கடித்தார். கே.எம். சுரேஷ் 66,020 வாக்குகளைப் பெற்றார், சசி புலிகுண்டேவுக்கு 42,922 வாக்குகள் விழுந்தன. 20,076 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
பெங்களூரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப சுற்றுகளிலிருந்தே தொடர் முன்னிலை வகித்த கே.எம். சுரேஷ், இறுதியில் தெளிவான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் மொத்தம் 20,076 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. என்.டி.ஏ. வேட்பாளரின் வெற்றி அதிகாரப்பூர்வமானதும், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி வெற்றியை விமரிசையாகக் கொண்டாடினர்.
நேற்று தொடங்கிய மொத்தம் 10 சுற்றுகள் கொண்ட வாக்கு எண்ணிக்கை பணி இன்று காலை நிறைவடைந்தது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான சசி புலிகுண்டே 42,922 வாக்குகளைப் பெற்றார். சர்வ ஜனதா கட்சி வேட்பாளர் சி.ஜி. பாட்டீல் 162 வாக்குகளையும், சுயேச்சை வேட்பாளர்களான கபனிகௌடா 156, சிக்கராஜு எஸ். ஒய். யாதவ் 377, லட்சுமய்யா ஆர். 387, லட்சுமிகாந்த் எஸ். யாதவ் 369, சசி புலிகுட்டி 449, சையத் அபாக் அகமது 113 மற்றும் அட்வகேட் பாரித் 1,107 வாக்குகளையும் பெற்றனர். வாக்கு எண்ணிக்கை செயல்பாட்டில் மொத்தம் 1,12,062 வாக்குகள் செல்லுபடியாகும் வாக்குகளாகவும், 20,076 வாக்குகள் செல்லாதவை என நிராகரிக்கப்பட்டும் உள்ளன.
மொத்தத்தில், 4 மேலவை தொகுதிகளின் தேர்தலில் பாஜக – ஜே.டி.எஸ். கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளது என்.டி.ஏ. கூட்டணிக்கு அரசியல் பலத்தைச் சேர்த்துள்ளது. வரவிருக்கும் தேர்தல்களின் பார்வையில் இந்த முடிவு மிகவும் முக்கியமானது என பாஜக மற்றும் ஜே.டி.எஸ். தலைவர்கள் பகுப்பாய்வு செய்துள்ளனர்.















