Home மாவட்டங்கள் சென்னை உயர் நீதிமன்றம் அருகே அரசு பஸ் மோதி கார்கள் சேதம்

உயர் நீதிமன்றம் அருகே அரசு பஸ் மோதி கார்கள் சேதம்

சென்னை, அக். 28-
சென்னை உயர் நீதிமன்றம் அருகே கட்டுப்பாட்டை இழந்த மாநகர பஸ், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட கார்கள் மீது அடுத்தடுத்து மோதியதில் அவை பலத்த சேதமடைந்தன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட மாநகர பஸ், தீவுத்திடல் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பஸ்ஸை ராமமூர்த்தி ஓட்டினார். சென்னை உயர் நீதிமன்றம் அருகே உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் பஸ் சென்றபோது, திடீரென அதன் பிரேக் பழுதடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது. பஸ் மோதியதில் 10-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன. சில கார்களின் முன்பகுதிகள் நொறுங்கின. தொடர்ந்து சென்ற பஸ், சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர் மீது ஏறி நின்றது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பஸ்ஸில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். எனினும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து காரணமாக என்.எஸ்.சி. போஸ் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த பூக்கடை போக்குவரத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போர் நினைவுச் சின்னம் அருகே தடுப்புகளை அமைத்து, அந்த வழியாக வந்த வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டனர். பின்னர் சேதமடைந்த கார்கள் மற்றும் சாலையின் நடுவே நின்ற பஸ் அப்புறப்படுத்தப்பட்டன. நீண்ட நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது. இதுதொடர்பாக பஸ் டிரைவர் ராமமூர்த்தி, நடத்துநர் தேவராஜ் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேக் உண்மையிலேயே பழுதடைந்ததா, விபத்துக்கு வேறு காரணம் உள்ளதா, பஸ் முறையாகப் பராமரிக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. சேதமடைந்த கார்களில் பெரும்பாலானவை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுடையவை எனக் கூறப்படுகிறது.