
புதுடெல்லி, நவ. 29- நிபந்தனைகளைப் பாஜக அரசு ஏற்றுக் கொண்டதால், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிப்பதாகவும் 3 ஆண்டு போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நாளை தொடங்கி டிசம்பர் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் தொகுதி மறுவரை மசோதா, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற பாஜக தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
தொகுதி மறுவரையறை என்ற ஆபத்து வர உள்ளது. அதனால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறையும் என்று இந்தியாவிலேயே முதல்முதலாக எச்சரித்தது நாம்தான். கடந்த ஏப்ரல் மாதம், சட்டப்பேரவைத் தேர்தல் காலத்தில் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் ஒரு மர்ம மசோதாவை கொண்டு வந்தார்கள். படித்து பார்க்க கூட உரிய கால அவகாசம் தராமல் அவசரமாகக் கொண்டு வந்த அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தோற்கடித்தோம்.
பாஜகவுக்குக் கடும் அழுத்தத்தைக் கொடுத்தோம். தற்போது இருக்கும் தொகுதி எண்ணிக்கையே தொடரலாம் என நாம் விரும்பினாலும், தவிர்க்க முடியாத அரசியல் சாசன விதிப்படி தொகுதிகளை அதிகரிக்கும் போது, அதில் தமிழகம் பாதிக்கப்பட கூடாது என ‘நடைமுறைக்கு ஏற்ற’ தீர்வை 2024-ம் ஆண்டே சட்டப்பேரவைத் தீர்மானம் மூலமாக முன்வைத்தோம்.
நாம் மட்டும் குரல் எழுப்பாமல் இருந்திருந்தால், மக்கள் தொகை அடிப்படையில் வட மாநிலங்களுக்கு மட்டும் தொகுதிகளை அதிகரித்துவிட்டு, நமக்கான பர்செண்டேஜை குறைத்திருப்பார்கள். ஆனால், இன்றைக்கு மசோதாவின் நகல் கிடைத்துவிட்டது. அதில் நாம் முன்வைத்த 2 முக்கியமான கோரிக்கைகளுமே இடம்பெற்றுள்ளன. இது நம்முடைய 3 ஆண்டு கால தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. நாம் எதிர்பார்த்த மாதிரியே இந்த மசோதா வந்துள்ளது. தமிழகத்தின் நலன் பறிபோக கூடாது. அதில் சமரசம் செய்து கொள்ளமாட்டோம்.













