Home செய்திகள் உலக செய்திகள் சுழற்சி பிரதமர் பதவி: நெதன்யாகு யோசனை

சுழற்சி பிரதமர் பதவி: நெதன்யாகு யோசனை

ஜெருசலேம், நவ. 29-
இஸ்ரேலில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 120 இடங்களில் எந்தவொரு அரசியல் கூட்டணிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 61 இடங்கள் கிடைக்கவில்லை. இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதத்துக்கும் மேலாகியும் புதிய அரசு அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைவிட 8 இடங்கள் குறைவாக, பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அணி 53 இடங்களைப் பெற்றுள்ளது. ஐசன்கோட் தலைமையிலான அணி 48 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அரபுக் கட்சிகளான ரா’ம் மற்றும் ஜாயின்ட் லிஸ்ட் ஆகியவை இணைந்து 19 இடங்களைப் பெற்றுள்ளன. இதனால் அரசு அமைப்பதில் தீர்மானிக்கும் சக்தியாக அவை உருவெடுத்துள்ளன.எனினும், அரபுக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதை நெதன்யாகுவும் ஐசன்கோட்டும் ஏற்கெனவே நிராகரித்துள்ளனர். இந்தச் சூழலில், இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்ஸாக், அரசு அமைப்பதற்காக ஐசன்கோட்டுக்கு டிசம்பர் 6-ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளார். இதையடுத்து, தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியாக, நெதன்யாகுவின் லிகுட் கட்சி அதிகாரப்பூர்வமற்ற வழிகளில் புதிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது. அதன்படி, ஆட்சிக் காலத்தின் முதல் பாதியில் ஐசன்கோட் பிரதமராகப் பணியாற்ற வேண்டும் என்றும், இரண்டாம் பாதியில் நெதன்யாகு பிரதமர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் பிரதமர் பதவி வகிக்கும் இந்தத் திட்டத்தை ஏற்க ஐசன்கோடும் அவரது கூட்டணிக் கட்சிகளும் கடும் தயக்கம் காட்டி வருகின்றன. ஊழல் வழக்குகளை எதிர்கொண்டு வரும் நெதன்யாகு, அரசு அமைப்பதைத் தாமதப்படுத்திவிட்டு இறுதியில் மீண்டும் பொதுத் தேர்தலுக்கு வழிவகுத்துவிடுவாரோ என்ற அச்சம் எதிர்க்கட்சிகளிடையே நிலவுகிறது.