Home மாவட்டங்கள் சென்னை அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தலுக்கு அனுமதி

அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தலுக்கு அனுமதி

சென்னை: நவ. 27-
அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடை நீடிக்கும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி, நெல்லையைச் சேர்ந்த வக்கீல் கே.வெங்கடாஜலபதி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்களை எதிர்த்து தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர், 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடத் தடை விதித்து கடந்த ஜூலை 10-ந்தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தனர். அந்தத் தடையை நீக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் உள்ளிட்டோர் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இதையடுத்து, தீர்ப்பு இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு நேற்று அறிவித்தது. இந்த நிலையில், வழக்கில் இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதன்படி, அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை ஐகோர்ட்டு நீக்கியது. இந்த இரு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தலாம் என்றும், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான தடை தொடரும் என்றும் உத்தரவிடப்பட்டது. தேர்தல் வழக்குகள் முடிவடைந்த பின்னரே அந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த அனுமதிக்க முடியும் என்று ஐகோர்ட்டு தெரிவித்தது. தடை நீக்கப்பட்டுள்ளதால், 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. விஸ்.பாபு மறைவால் அந்தத் தொகுதியும் காலியாக இருப்பதால், அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளுடன் கொளத்தூர் இடைத்தேர்தலுக்கும் தேதி அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.