Home மாவட்டங்கள் சென்னை பெரம்பூர் தேர்தல் வழக்கு: விஜய் மனு தள்ளுபடி

பெரம்பூர் தேர்தல் வழக்கு: விஜய் மனு தள்ளுபடி

சென்னை, நவ. 27:
பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, வாக்காளர் தினேஷ் தொடர்ந்த தேர்தல் வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது. பெரம்பூர் தொகுதியில் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து, தொகுதி வாக்காளர் தினேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை நிராகரிக்கக் கோரி விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நீதிபதி வி. லட்சுமி நாராயணன் விசாரித்தார்.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த அக்டோபர் 14-ம் தேதி, விஜய்யின் மனு மீதான தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், அந்த மனுவை நீதிபதி வி. லட்சுமி நாராயணன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். விஜய் தரப்பில், வேட்புமனுவில் அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், எந்தத் தகவலும் மறைக்கப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது. ஆனால், தினேஷ் தரப்பில், பண்ருட்டியில் வாங்கியிருந்த ரூ.30 கோடி மதிப்பிலான விவசாய நிலம் குறித்த விவரங்களை விஜய் வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை என்றும், இதனால் வாக்காளர்கள் சுதந்திரமாக முடிவெடுப்பதில் தேவையற்ற தாக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.