
ஹாசன், நவ. 27-
ஹாசன் தாலுகா நிடுடி கிராமம் அருகே மக்கள் நடமாடும் பிரதான சாலையிலேயே பட்டப்பகலில் இரண்டு சிறுத்தைகள் சுற்றித் திரிந்துள்ளன. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், கிராமத்தினரும் கடும் பீதியில் உள்ளனர்.
மாவட்டத்தின் மலைநாடு பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சமவெளிப் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இந்த நிலையில், நிடுடி கிராமம் அருகே இரண்டு சிறுத்தைகள் ஒன்றாகச் சாலையில் உலா வந்தது அப்பகுதி மக்களை மேலும் அச்சமடையச் செய்துள்ளது.
இதற்கு முன்பும் பலமுறை இந்த சிறுத்தைகள் கிராமத்தை ஒட்டிய பகுதிகளில் தென்பட்டுள்ளன. அப்போது அவை ஊருக்குள் புகுந்து தெருநாய்கள் மற்றும் கால்நடைகளைத் தாக்கிக் கொன்று மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தற்போது சிறுத்தைகளின் நடமாட்டம் மீண்டும் அதிகரித்துள்ளதோடு, இரவு நேரங்களில் தைரியமாகக் கிராமங்களுக்குள் வரத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே மக்கள் அஞ்சுவதுடன், உயிர் பயத்துடனேயே நாட்களைக் கடத்தி வருகின்றனர்.
மேலும், பகல் நேரங்களிலேயே விவசாயிகளின் தோட்டங்கள் மற்றும் விளைநிலங்களிலும் சிறுத்தைகள் சர்வ சாதாரணமாகத் தென்படுவதால், விவசாயப் பணிகளை மேற்கொள்வதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் நடப்பதற்கு முன்பு வனத்துறை அதிகாரிகள் உடனடியாகக் களத்தில் இறங்கி, கூண்டு வைத்து சிறுத்தைகளைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













