
பெங்களூரு, நவ. 27-
முதல்வர் டி.கே.சிவக்குமாரின் சதாசிவநகர் இல்லம் மற்றும் விதானசவுதாவுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த விஷமியை சதாசிவநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.
பியாடரஹள்ளி பாலாஜி நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் (பி.ஜி.) வசித்து வந்த கார்த்திக் (வயது 28) என்பவரே கைது செய்யப்பட்ட குற்றவாளி ஆவார். தனியார் மருத்துவமனை ஒன்றில் நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் பணியாளராக (கேர்டேக்கர்) வேலை பார்த்து வந்த அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகவந்தராயன் என்பவர் ‘நம்ம யாத்ரி’ செயலி மூலம் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில் கார்த்திக் என்பவர் சதாசிவநகரில் இருந்து ஆர்.ஆர்.நகருக்கு செல்வதற்காக ஆட்டோவை முன்பதிவு செய்திருந்தார். அப்போது ஆட்டோ ஏறும் இடமாக (பிக்கப் லொகேஷன்) முதல்வர் டி.கே.சிவக்குமாரின் சதாசிவநகர் இல்ல முகவரி காட்டியது.
அந்த இடத்திற்கு சென்ற ஆட்டோ டிரைவர், முன்பதிவு செய்த கார்த்திக்கிற்கு போன் செய்தார். அழைப்பை ஏற்ற கார்த்திக், தான் முதல்வர் இல்லத்தில் இருப்பதாகக் கூறி, அங்குள்ள தடுப்பு வேலி (பேரிகேட்) அருகே பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாரிடம் போனை கொடுக்குமாறு கூறியுள்ளார்.
அதன்படி ஆட்டோ டிரைவர் போலீசாரிடம் செல்போனை கொடுத்தார். போனை வாங்கி பேசிய போலீசாரிடம், முதல்வர் இல்லம் மற்றும் விதானசவுதாவுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த அந்த விஷமி உடனடியாக இணைப்பை துண்டித்துவிட்டார். அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வெடிகுண்டு கண்டறியும் படை, வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் படை உள்ளிட்ட பல்வேறு குழுவினர் முதல்வர் இல்லம் மற்றும் விதானசவுதாவை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் அங்கிருந்து எந்தவித வெடிபொருட்களும் சிக்காததால், அது புரளி கிளப்பும் வெறும் மிரட்டல் அழைப்பு என்பது உறுதியானது. இதுகுறித்து சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக்கொண்ட போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி, மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் கார்த்திக்கை கைது செய்தனர்.
சம்பவம் நடந்த அன்று ஆட்டோ டிரைவர் பகவந்தராயனின் உறவினருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் அவசரமாக சொந்த ஊருக்கு சென்றிருந்தார். பின்னர் நவம்பர் 7-ந் தேதி சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்ற அனுமதி பெற்று விசாரணையை முடுக்கிவிட்டு குற்றவாளி கார்த்திக்கை கைது செய்துள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட குற்றவாளி:
போலீசாரின் விசாரணையின் போது குற்றவாளி கார்த்திக் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார். மேலோட்டமாக பார்க்கும்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிகிறார். பெற்றோரை விட்டுப் பிரிந்து வீட்டை விட்டு வெளியேறி வசித்து வரும் இவர், இதற்கு முன்பும் இதேபோல் பல போலி மிரட்டல் அழைப்புகளை விடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.














