
சென்னை: மே 14 –
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. சினிமா, தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் என எந்த விஷயமாக இருந்தாலும் திரிஷாவை மையமாக வைத்து தினமும் புதிய தகவல்கள் வெளியாகும் நிலையில், அவற்றில் பெரும்பாலானவற்றை அவர் கண்டு கொள்ளாமல் தனது வழக்கமான வாழ்க்கையையும் தொழிலையும் பார்த்து வந்தார். இந்த நிலையில் அரசியல் வருகை குறித்து திரிஷா பேசிய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. திரிஷா பற்றிய வதந்தி சமீபத்தில் பரவியுள்ள மிகப்பெரிய வதந்திகளில் ஒன்று நடிகர் மற்றும் தமிழக அரசியலில் முக்கியஸ்தராக உருவெடுத்துள்ள முதலமைச்சர் விஜய் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ததால் அங்கு திரிஷா போட்டியிடுவார் என்பதுதான். அதேபோல், அவர் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்ற பேச்சுகளும் சமூக வலைதளங்களில் பரவின. இந்த தகவல்கள் எந்த அதிகாரபூர்வ ஆதாரமும் இல்லாமல் பரவியிருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை கிளப்பின.
திரிஷா கொடுத்த விளக்கம் இந்த சூழ்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் திரிஷா அளித்திருந்த ஒரு பழைய பேட்டி தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், தொகுப்பாளர் திரிஷாவிடம், “நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? குந்தவை கதாபாத்திரத்தில் நீங்கள் அரசியல் நுணுக்கத்துடன் நடித்துள்ளீர்கள். அதனால் உங்களுக்குள் அரசியல் ஆர்வம் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு திரிஷா மிகத் தெளிவாக, “சத்தியமா அதற்கு வாய்ப்பே இல்லை. நான் அரசியலுக்கு வர மாட்டேன். எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. அதில் நான் எதையும் செய்ய முடியாது” என்று பதிலளித்தார். இப்போது பரவி வரும் அனைத்து வதந்திகளுக்கும் இந்த பதில் நேரடியான மறுப்பாகவே ரசிகர்கள் எடுத்துக்கொண்டு வருகின்றனர்.



















