
பியூனஸ் அயர்ஸ், செப். 17- அர்ஜெண்டினா கால்பந்து அணி வரும் 30-ம் தேதி பொலிவியா அணிக்கு எதிராக நட்புரீதியிலான போட்டியில் விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி புர்கினா ஃபாசோ அணிக்கு எதிராகவும், அக்டோபர் 6-ம் தேதி பெனின் அணிக்கு எதிராகவும் அர்ஜெண்டினா அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டிகளுக்கான 28 பேர் கொண்ட அர்ஜெண்டினா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 39 வயதான லயோனல் மெஸ்ஸியும் சேர்க்கப்பட்டுள்ளார். அக்டோபர் 6-ம் தேதி பியூனஸ் அயர்ஸில் பெனின் அணிக்கு எதிராக நடைபெறும் நட்புரீதியிலான போட்டியில் மெஸ்ஸி கலந்து கொள்வார் என அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது. இந்தப் போட்டி மெஸ்ஸிக்கு பிரியாவிடை வழங்கும் வகையில் அமையும் என்றும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் தோல்வியடைந்த பிறகு, லயோனல் மெஸ்ஸி ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
















