
மதுரை: செப். 17-
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா இன்று (செப்.17) காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் கோலாகலமாக நடைபெற்றது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட இக்கோயில், வழிபாட்டுத் தலமாக மட்டுமன்றி தமிழ்மொழி, சங்கம், கலை, பண்பாட்டின் தொன்மையான மையமாகத் திகழ்கிறது. குடமுழுக்கு விழாவை 2021-ல் நடத்த முடிவு செய்யப்பட்டபோதும், பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. பின்னர் கோயில் மற்றும் உபயதாரர் நிதியில் ரூ.28 கோடி மதிப்பில் 12 கோபுரங்களுக்கும் வண்ணம் பூசுதல், சேதமடைந்த சுதைச் சிற்பங்களைச் சீரமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
விழாவையொட்டி வடக்காடி வீதியில் 184 யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டன. செப்.6-ல் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. செப்.11 மாலை முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. மருந்து சாற்றும் வைபவத்தையொட்டி செப்.11 முதல் 16-ம் தேதி வரை மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சந்நிதிகள் அடைக்கப்பட்டிருந்தன. செப்.16 காலை 5 மணியளவில் பத்தாம் கால யாக வேள்வி முடிந்து கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது.
அன்று காலை 6 மணிக்குள் தெட்சிணாமூர்த்தி, துர்க்கை, லெட்சுமி, பத்ரகாளி, 63 நாயன்மார்கள், சுற்றுக் கொடி மரங்கள் உள்ளிட்ட 414 பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. 12 கோபுரங்களுக்கும் நிலை மாலைகள் சாற்றப்பட்டன. இன்று அதிகாலை 4 மணி முதல் 5.45 மணி வரை 12-ம் கால யாக வேள்வி நடைபெற்றது. 7.40 மணிக்கு மீனாட்சி, சுந்தரேசுவரர் சந்நிதிகளின் தங்க விமானங்கள், ராஜகோபுரக் கலசங்களுக்கு ஒரே நேரத்தில் குடமுழுக்கு நடைபெற்றது. 7.55 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மனுக்கும், 8.10 மணிக்கு மூலவர் சுந்தரேசுவரர் சுவாமிக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. மொத்தம் 11 ஆயிரம் பேருக்கு பாஸ்கள் வழங்கப்பட்டன. இதில் 3 ஆயிரம் உபயதாரர்கள், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 ஆயிரம் பக்தர்களும் அடங்குவர். கோயிலின் மேல்தளத்தில் 9 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்பட்டனர்.பல்வேறு மடங்களின் ஆதீனங்கள், அமைச்சர்கள் ரமேஷ் (அறநிலையத் துறை), நிர்மல் குமார் (சட்டத் துறை), பெ.விஸ்வநாதன் (உயர் கல்வி), ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் 6,500 போலீஸார் மூன்றடுக்குப் பாதுகாப்பில் ஈடுபட்டனர். பக்தர்களுக்காக 27 இடங்களில் 54 மருத்துவ முகாம்கள், 12 ஆம்புலன்ஸ்கள், 70 மருத்துவர்கள், 150 துணை மருத்துவப் பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர். அரசு ராஜாஜி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. பேருந்து, ரயில் நிலையங்கள், பார்க்கிங் பகுதிகள், முக்கிய வீதிகளில் 51 எல்இடி திரைகள் மூலம் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. புதுமண்டபத்தில் ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, 1800-425-6781, 1800-425-6782 கட்டணமில்லா எண்கள் அறிவிக்கப்பட்டன.













