Home தலைப்பு செய்தி மோடிக்கு விஜய் ஸ்டாலின் வாழ்த்து

மோடிக்கு விஜய் ஸ்டாலின் வாழ்த்து

புதுடெல்லி: செப். 17-
பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் முன்னிட்டு ஜனாதிபதி துணை ஜனாதிபதி தமிழக முதல்வர் விஜய் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் இன்று பிரதமர் நரேந்திர மோடியின் 76வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அவரது 25 ஆண்டுகால மக்கள் சேவையைப் போற்றும் வகையில், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை நாடு முழுவதும் மாதாந்திர சேவை முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமருக்கு நீண்ட ஆயுள் வேண்டி, இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை வீடுகளில் மண் விளக்குகள் ஏற்றி வழிபட பாஜக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
பிரதமர் மோடியின் 25 ஆண்டு கால மக்கள் சேவையைப் போற்றும் வகையில், புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் 25 அடி நீளமுள்ள மணல் சிற்பத்தை உருவாக்கினார். ‘தேசத்திற்கான 25 ஆண்டுகால சேவை’ என்ற கருப்பொருளில் உருவாக்கப்பட்ட இதில், ‘இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மோடி ஜி’ என்று எழுதப்பட்டுள்ளது. 2,500 அகல் விளக்குகளும் பிரதமர் மோடியின் உருவப்படமும் இடம்பெற்றுள்ளன. இந்தச் சிற்பம் வரவேற்பைப் பெற்றது.
துணை ஜனாதிபதி சிபிஆர், “பிரதமர் மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கித் தாய்நாட்டை வழிநடத்திச் செல்லும் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் தொடர்ந்து வலிமை கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா: பிரதமர் மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது தலைமையின் கீழ், இந்தியா இன்று உலக அரங்கில் நம்பிக்கையுடன் ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கி வருகிறது. வளர்ச்சி, தன்னிறைவு, புத்தாக்கம், டிஜிட்டல் முன்னேற்றம், உள்கட்டமைப்பு விரிவாக்கம் உள்ளிட்டவற்றில் நாடு தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி வருகிறது. நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட உங்கள் சுறுசுறுப்பான வாழ்க்கை, வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி அயராது உழைக்க லட்சக்கணக்கான குடிமக்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. உங்களுக்குச் சிறந்த ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் நாட்டிற்குத் தொடர்ந்து சேவை செய்வதற்கான வலிமையை அருளுமாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், “பிரதமர் மோடிக்கு வெற்றி, நல்வாழ்வு மற்றும் மக்கள் சேவையில் இன்னும் பல ஆண்டுகள் அமைய வாழ்த்துவதில் தேசத்துடனும், உலகத்துடனும் நானும் இணைகிறேன். உங்கள் சாதனைகள் மூலம் நீங்கள் தொடர்ந்து உலகளவில் ஊக்கமளித்து வருகிறீர்கள்” எனக் குறிப்பிட்டார்.
முதல்வர் விஜய் தனது பதிவில், “வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ உளமார வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்: பிரதமர் மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தங்களின் தலைமைத்துவமும், நாட்டின் மீதான அர்ப்பணிப்பும் இந்தியாவின் முன்னேற்றத்தையும் செழிப்பையும் தொடர்ந்து வலுப்படுத்துகின்றன. தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் திகழ்ந்து, தொடர்ந்து நாட்டிற்குச் சேவையாற்ற வலிமை பெற வாழ்த்துகிறேன்.