
மைசூர், செப். 17:
கணபதி ஊர்வலம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் தனஞ்செயன் பேசிய சர்ச்சைக்குரிய வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்த யூடியூபர் மஞ்சுநாத் என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு (எஃப்.ஐ.ஆர்) செய்துள்ளனர்.
டி.நரசீபுரா உள்ளூர் சேனலின் எடிட்டரான மஞ்சுநாத், கூட்டத்தின் முழு உரைபையும் ஒளிபரப்பாமல், வேண்டுமென்றே 9 முதல் 10 நிமிடங்கள் கொண்ட கடைசி பகுதியை மட்டும் எடிட் செய்து தவறாக சித்தரித்துள்ளார். “மசூதி வீதியில் சென்றால் உங்களை சும்மா விடமாட்டேன்” என்று இன்ஸ்பெக்டர் பேசுவது போல் எடிட் செய்யப்பட்ட குறுகிய வீடியோ துண்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, இரு பிரிவினரிடையே வெறுப்பைத் தூண்டும் வகையிலும், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்ததாக இன்ஸ்பெக்டர் தனஞ்செயன் புகார் அளித்துள்ளார். அதனடிவையில் பி.என்.எஸ் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த குற்றச்சாட்டை யூடியூபர் மஞ்சுநாத் தீவிரமாக மறுத்துள்ளார். “இன்ஸ்பெக்டர் தனஞ்செயன் தான் காவலர் யஷ்வந்த் மூலமாக என்னை காவல் நிலையத்திற்கு அழைத்தார். கணபதி விசர்ஜனம் தொடர்பான ஆலோசனைகளை வீடியோ எடுக்குமாறு அவரே தான் கூறினார். வீடியோவை அப்லோட் செய்தபோது அவர் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இப்போது தனது தவறை மறைப்பதற்காக என் மீது பொய் வழக்குப் போட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













