
சென்னை, செப். 9- 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் ஐச்சி-நகோயா நகரில் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகின்றன. இப்போட்டிகளில் கிரிக்கெட் பிரிவு முக்கியமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக, பெண்கள் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்திய மகளிர் அணி நேரடியாக காலிறுதிச் சுற்றில் பங்கேற்கிறது. காலிறுதி போட்டிகள் செப்டம்பர் 18-ம் தேதி, அரையிறுதி செப்டம்பர் 20-ம் தேதி, இறுதிப்போட்டி மற்றும் மூன்றாவது இடத்துக்கான போட்டி செப்டம்பர் 22-ம் தேதி நடைபெறவுள்ளது. ஆண்கள் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி அக்டோபர் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்திய ஆண்கள் அணியும் நேரடியாக காலிறுதியில் பங்கேற்கிறது. காலிறுதி செப்டம்பர் 28-ம் தேதி, அரையிறுதி அக்டோபர் 1-ம் தேதி, இறுதிப்போட்டி மற்றும் மூன்றாவது இடத்துக்கான போட்டி அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும். அதே நாளில், அக்டோபர் 3-ம் தேதி, இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நியூ சண்டிகரில் நடைபெற உள்ளது. இந்த சூழலில், ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றால், ஒரே நாளில் இந்தியாவின் இரு அணிகள் வெவ்வேறு நாடுகளில் விளையாடும். 1998-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதியும் இதேபோன்ற நிகழ்வு நடந்தது. அப்போது, இந்திய அணி மலேசியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும், கனடாவில் சஹாரா பிரெண்ட்ஷிப் கோப்பைத் தொடரிலும் ஒரே நாளில் விளையாடியது.
















