
அமராவதி: அக். 27-
மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, நேற்று அதிகாலை மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக உருவானது. இதற்கு ‘அர்னாப்’ என பெயரிடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான இந்தப் புயல் தீவிரமடைந்து ஆந்திர மாநிலக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. விசாகப்பட்டினத்திலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 610 கிலோமீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து சுமார் 690 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் நிலைகொண்டிருந்தது.
இந்தப் புயல் நாளை (28-ம் தேதி) காலை பாபட்லா–விசாகப்பட்டினம் இடையே, யானம் அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 115 முதல் 125 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அதிகபட்சமாக மணிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசாவின் கடலோரப் பகுதிகளுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உரிய மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். புயல் காரணமாக காக்கிநாடா, கோனசீமா, ஏலூரு, கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் பலத்த காற்று வீசியதுடன், பல பகுதிகளில் கனமழையும் பெய்தது. இதையடுத்து பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன், மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. இணையச் சேவையும் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆந்திராவுக்கு 7 தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்களும், 8 மாநிலப் பேரிடர் மீட்புக் குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன. அர்னாப் புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து கரையைக் கடக்க உள்ளதால், தமிழகத்துக்கான பாதிப்பு நீங்கியுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் வரும் 1-ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது













