Home மாவட்டங்கள் பெங்களூர் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் சிறையில்

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் சிறையில்

சென்னை: அக். 27-
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
2021–2026 திமுக ஆட்சிக் காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்த்துதல், டிடிசிபி அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலிக்கப்பட்டதாக, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில், அந்த அமைப்பின் முன்னாள் தலைவர் மற்றும் திமுக பிரமுகரான பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்டார். அவர் 177 தனியார் பள்ளிகளிடம் இருந்து ரூ.400 கோடிக்கும் அதிகமாகப் பணம் பெற்றது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் அன்பில் மகேஸுக்கு தொடர்பு இருப்பதாகவும், அரசகுமார் மற்றும் அவரது குடும்பத்தினரின் 20 வங்கிக் கணக்குகள், அன்பில் மகேஸின் நெருங்கிய நண்பரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முத்துக்குமாருடன் தொடர்புடைய 29 கணக்குகளிலும் பணப் பரிமாற்றம் நடந்ததாகவும் போலீஸார் கூறினர். முத்துக்குமார் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், சென்னை மற்றும் திருச்சியில் உள்ள அன்பில் மகேஸின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, அவரிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், 177 பள்ளி நிர்வாகிகளிடம் வசூலிக்கப்பட்ட தொகை இறுதியில் யாரிடம் சென்றது என்பதைக் கண்டறிய அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டார்.தீர்ப்புக்குப் பிறகு வழக்கறிஞர் பி.வில்சனின் அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய அன்பில் மகேஸை, அங்கிருந்து வெளியே வந்தபோது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நவம்பர் 6 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி எல்.எஸ்.சத்யமூர்த்தி உத்தரவிட்டார். சிறையில் முதல் வகுப்பு வசதியும், தேவையான மருத்துவ உதவியும் வழங்க உத்தரவிடப்பட்டது. தன் மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.