
போபால்: ஜூன் 29-
ஆம்புலன்ஸ், பாலம் வசதி இல்லாததால் பிரசவ வலியால் துடித்த பெண்ணை கிராம மக்கள் கட்டிலில் சுமந்து சென்ற போது வழியிலேயே குழந்தை பிறந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டம், ஹதோடா ஹிரி கிராமத்துக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. அங்கு வசிக்கும் சுமார் 20 குடும்பங்கள், மழைக்காலத்தில் ஆற்றில் ஏற்படும் வெள்ளம் காரணமாக மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப் படுகின்றனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த சவிதா விஸ்வ கர்மாவுக்கு (35) கடந்த புதன் கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
உறவினர்கள் 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர்.
ஆனால் ஆற்றில் வெள்ளம் ஓடியதால் ஆம்புலன்ஸால் வர முடியவில்லை. வேறு வழியின்றி, கிராம மக்கள் அவரை கட்டிலில் படுக்க வைத்து, தோளில் சுமந்தபடி ஆற்றைக் கடக்க முயன்றனர். அப்போது வலி தீவிரமடைந்து வழியிலேயே சவிதா குழந்தையைப் பெற்றெடுத்தார்.
இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.அதன் பின்னர், தாயையும் குழந்தையையும் பத்திரமாக ஆற்றின் மறுபக்கத்துக்குக் கொண்டு வந்த கிராம மக்கள், ஆம்புலன்ஸுக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். அப்போதும் ஆம்புலன்ஸ் வராததால், இருவரையும் ஒரு மோட்டார் சைக்கிளில் அமரவைத்து அமர்வாடா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மழைக் காலத்திலும் தங்கள் கிராமம் துண்டிக்கப்படுவதாகவும், பாலம் மற்றும் சாலை வசதி கேட்டு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை என்றும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அம்மாநிலத்தின் கிராமப்புற மருத்துவக் கட்டமைப்பின் அவல நிலையை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.


















