
சென்னை: செப். 11:
காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு வரும் அக். 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட அந்தக் கட்சித் தலைவர்கள் முன்வந்துள்ளனர்.
மதுராந்தகம் தனித் தொகுதி என்றாலும், வன்னியர் சமுதாய வாக்குகள் கணிசமாக உள்ளன. கடந்த சட்டசபைத் தேர்தலில் மதுராந்தகத்தில் பா.ம.க. வாக்குகள் கைகொடுத்ததால்தான் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் எளிதில் வெற்றி பெற்றார். இதனால், இடைத்தேர்தலில் பா.ம.க. ஆதரவைப் பெற தவெக தலைமை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக இரு அமைச்சர்கள் பா.ம.க. தலைமையுடன் பேசி வருகின்றனர். இதுகுறித்து தவெக வட்டாரங்கள் கூறியதாவது: தவெக கூட்டணியில் இணைய சவுமியா உள்ளிட்ட பா.ம.க. சட்டசபை உறுப்பினர்களும், நிர்வாகிகளும் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அந்தக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றிருப்பது அவர்களுக்கு நெருடலாக உள்ளது. வெளிப்படையாக ஆதரவு அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாற்று ஏற்பாடாக அ.தி.மு.க.வை ஆதரிக்காமல், தேர்தலைப் புறக்கணிக்கும் நிலைப்பாட்டை எடுக்குமாறு பா.ம.க.விடம் பேச்சு நடத்தப்படுகிறது. மரகதம் குமரவேல் பதவி விலகியபோது அவரைக் கடுமையாக விமர்சித்த அன்புமணி, அவர் மீண்டும் போட்டியிட்டால் தோற்கடிப்போம் என சூளுரைத்தார். இதனால் பா.ம.க. இக்கட்டான நிலையில் உள்ளது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இடைத்தேர்தலில் தவெகவை ஆதரிக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும் பேசப்பட்டு வருகிறது. இவ்விரு கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெறாமல், தவெக அரசை வெளியில் இருந்து ஆதரித்து வருகின்றன. இடைத்தேர்தல் தொடர்பான தங்கள் நிலைப்பாட்டை கம்யூனிஸ்ட் கட்சிகள் இதுவரை அறிவிக்கவில்லை. இதற்கிடையே, புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது. இதனால், தங்கள் வேட்பாளரை ஆதரிக்குமாறு கோரி, அக்கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலர் சலீம் மற்றும் நிர்வாகிகள், தவெக பொதுச்செயலர் ஆனந்தை நேற்று பனையூரில் சந்தித்தனர்.













