Home செய்திகள் தேசிய செய்திகள் ஜெயின் கோயிலில் தாக்குதல் நடத்த முதலில் திட்டம்

ஜெயின் கோயிலில் தாக்குதல் நடத்த முதலில் திட்டம்

புதுடெல்லி: செப்.11-
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலை நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதி உமர், முதலில் டெல்லியின் மிகவும் பழமையான ஜெயின் கோயிலான லால் மந்திரில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், மத்திய டெல்லியில் நிலவிய போக்குவரத்து நெரிசல் மற்றும் போலீஸாரின் கண்காணிப்பு காரணமாக கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றியதாகவும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக என்ஐஏ தீவிர விசாரணை நடத்தி, 7,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கடந்த மே மாதம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்தக் குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
என்ஐஏ குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: கார் குண்டு வெடிப்பை நிகழ்த்திய தற்கொலைப்படை தீவிரவாதியான உமர் நபியின் நடமாட்டத்தை ஆய்வு செய்ததில், லால் மந்திரில் தாக்குதல் நடத்த அவர் முதலில் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. எனினும், மத்திய டெல்லி போக்குவரத்து நெரிசல் மற்றும் போலீஸாரின் கண்காணிப்பு காரணமாக, கடைசி நிமிடத்தில் திட்டத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்படி, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரில் லால் மந்திர் நோக்கிச் சென்று கொண்டிருந்த உமர், அங்கு செல்லாமல் யூ-டர்ன் அடித்து செங்கோட்டையை அடைந்தார். அடுத்த சில நிமிடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்தார். மேலும், உமர் மற்றும் அவரது கூட்டாளியான ஷாஹீன் சயீத் ஆகியோருக்குச் சொந்தமான பென் டிரைவ்களில் இருந்து கைப்பற்றப்பட்ட பிடிஎஃப் கோப்புகளில், யூரியா நைட்ரேட்டைப் பயன்படுத்தி வெடிபொருட்கள் தயாரிக்கும் முறை குறிப்பிடப்பட்டிருந்தது. சிறுநீரிலிருந்து யூரியாவைப் பிரித்தெடுக்கும் முறையும் அந்த ஆவணங்களில் இடம்பெற்றிருந்தது. உமரின் அறையில் சிறுநீர் நிரம்பிய பாலித்தீன் பையைக் கண்டதாக பெண் ஒருவர் சாட்சியளித்துள்ளார். இதன் மூலம், சிறுநீரிலிருந்து குண்டு தயாரிக்கும் முயற்சியில் உமர் ஈடுபட்டது உறுதியானதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.