
புதுடில்லி, செப். 16- இந்தியா–நியூசிலாந்து இடையே மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்டோபர் 19 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்தியா–நியூசிலாந்து இடையிலான பொருட்கள் மற்றும் சேவைகள் வர்த்தகத்தை அதிகரிப்பதுடன், முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி கையெழுத்தானது. ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும், நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீத வரி விலக்கு சலுகையுடன் கூடிய சந்தை வசதி கிடைக்கும். இதுவரை பீங்கான் பொருட்கள், தரைவிரிப்புகள், ஆட்டோமொபைல்கள், வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட இந்தியப் பொருட்களுக்கு நியூசிலாந்து 10 சதவீதம் வரை இறக்குமதி வரி விதித்து வந்தது. மேலும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.1.90 லட்சம் கோடி நேரடி அன்னிய முதலீடு செய்ய நியூசிலாந்து உறுதி அளித்துள்ளது. அதேபோல், நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதி வரியையும் இந்தியா ரத்து செய்துள்ளது. இந்நிலையில், இந்தியா–நியூசிலாந்து இடையிலான இந்த வர்த்தக ஒப்பந்தம் அக்டோபர் 19-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.















