
ஈரான்: செப். 2-
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக ஈரானுக்கு எதிரான தனது ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரான் தரப்பிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாகவும், சர்வதேச கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பதாகவும் கூறி, அமெரிக்க ராணுவம் ஈரானின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து சுமார் 100-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது சக்திவாய்ந்த வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான் அரசுக்குச் சொந்தமான இரண்டு பெரிய எண்ணெய் டேங்கர் கப்பல்களும் இந்த தாக்குதல்களில் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதி யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதில் ஈரானும் அமெரிக்காவும் உடன்பாட்டை எட்டாமல் உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் Tanker-for-Tanker என்ற கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதாவது ஈரானின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் அந்த நாட்டின் டேங்கர் கப்பல்களை தாக்குவது என முடிவு செய்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில், ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை கடலில் கண்ணிவெடிகளை பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு அருகில் உள்ள லாராக் தீவு பகுதியில், ஈரான் படையினர் கடல் கண்ணிவெடிகளை ஏற்றி செல்லும் ராக்கெட் லாஞ்சர்களை தயார்படுத்தி கொண்டிருந்தபோது அமெரிக்கப் படைகள் அவற்றை தாக்கி அழித்தன என தெரிவித்துள்ளது.













