Home மாவட்டங்கள் பெங்களூர் தனியே செல்பவர்களை மிரட்டி பணம் பறிக்கும் 3 பேர் கைது

தனியே செல்பவர்களை மிரட்டி பணம் பறிக்கும் 3 பேர் கைது

பெங்களூர்: செப்.2-
பெங்களூரில் தனியாக நடந்து செல்பவர்களை பின்தொடர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 3 பேரை சுப்ரமண்யபுரா போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விவேகானந்த நகரைச் சேர்ந்த ஷேக் மாஜ் (வயது 25), பங்காரப்பேட்டையைச் சேர்ந்த சையத் அஃப்ரிதுல்லா (21) மற்றும் தலக்கட்டப்புராவைச் சேர்ந்த முகமது சாதிக் (21) ஆகிய 3 பேரே கைது செய்யப்பட்ட ஆசாமிகள் ஆவர்.
கைதானவர்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 4 செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, மேலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குமாரசாமி லே-அவுட் அருகே டெலிவரி பாய் ஒருவர் ஆர்டரை டெலிவரி செய்துவிட்டு, குக்பலாளா பிரதான சாலையில் உள்ள சிங்கப்பூர் கார்டன் சாலையில் இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த இந்த 3 பேர் கொண்ட கும்பல், கொலை மிரட்டல் விடுத்து அவரிடமிருந்த ரூ.4,000 ரொக்கப் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டது.
இதுகுறித்து சுப்ரமண்யபுரா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ரகசியத் தகவலின் அடிப்படையில் கோணனகுண்டே ஆவலஹள்ளியில் உள்ள ஒரு வீட்டின் அருகே சுற்றித்திரிந்த 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
இவர்கள் கைதானதன் மூலம் சுப்ரமண்யபுரா, கோணனகுண்டே, ஜெயநகர் மற்றும் குமாரசாமி லே-அவுட் காவல் நிலையங்களில் பதிவான தலா ஒரு வழிப்பறி வழக்குகள் மற்றும் தலக்கட்டப்புரா காவல் நிலையத்தின் 1 பைக் திருட்டு வழக்கு என மொத்தம் 5 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன.
தென்மேற்கு பிரிவு துணை போலீஸ் கமிஷனர் அனிதா பி. ஹட்டண்ணவர் வழிகாட்டுதலின் பேரில், சுப்ரமண்யபுரா போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிகாந்த் மற்றும் அவரது தலைமையிலான தனிப்படை போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கைது செய்தனர்.