
பெங்களூர்: செப்.2-
போலி மருந்து விநியோக கும்பலின் முக்கிய சூத்திரதாரியும், சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த குற்றவாளியுமான பிரசாந்தை கைது செய்து தங்கள் காவலில் எடுக்க சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக இன்டர்போல் உதவியுடன் வெளியிடப்பட்ட ‘புளூ கார்னர்’ நோட்டீஸுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.
இன்டர்போல் அளித்த தகவலின் அடிப்படையில், தலைமறைவாக இருந்த பிரசாந்த் அஜர்பைஜான் நாட்டில் தங்கியிருப்பதை எஸ்.ஐ.டி. அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அங்குள்ள உள்ளூர் அதிகாரிகள் பிரசாந்தை பிடித்து விசாரணை நடத்திய பின்னர் விடுவித்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும், அவனை இந்தியாவுக்கு அழைத்து வர எஸ்.ஐ.டி. அதிகாரிகள் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இதற்கிடையே பிரசாந்தின் விசா காலம் வரும் செப்டம்பர் 9-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அவன் வேறு வழியின்றி இந்தியாவுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவன் நாடு திரும்பியதும் உடனடியாக விமான நிலையத்திலேயே வைத்து கைது செய்ய எஸ்.ஐ.டி. அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
நாட்டின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் பிரசாந்த் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அனுப்பப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவன் இந்திய மண்ணில் காலடி வைத்ததும் மடக்கிப்பிடிக்க சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. குற்ற வழக்குகளில் தேடப்படும் நபரின் அடையாளம், அவர் இருக்கும் இடம் அல்லது அவரது நகர்வுகள் குறித்த தகவல்களைச் சேகரிக்க இன்டர்போல் அமைப்பு அதன் உறுப்பினர் நாடுகளுக்கு அனுப்பும் சர்வதேச அறிவிப்புதான் ‘புளூ கார்னர் நோட்டீஸ்’ ஆகும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட குற்றவாளி எந்த நாட்டில் ஒளிந்திருக்கிறான் என்பதை கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது













