
பெங்களூர்: செப்.2-
பெங்களூரு மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர் ஆட்டோ மற்றும் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை ஸ்ரீராம்புரா போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.10.46 லட்சம் மதிப்புள்ள 11 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 ஆட்டோ ரிக்ஷா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீராம்புரா 2-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த ஹரீஷ் என்பவர், கடந்த ஜூலை 23-ஆம் தேதி இரவு தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் திருட்டுப்போனதாக புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், ஆகஸ்ட் 23-ஆம் தேதி கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மண்டியா மாவட்டம் ஹோசஹள்ளியைச் சேர்ந்த சுப்ரீத் எலியாஸ் குட்டு (வயது 25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தான் தனது கூட்டாளியுடன் சேர்ந்து வாகன திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து, அவர் கொடுத்த தகவலின் பேரில் மண்டியா பீச்சனஹள்ளியைச் சேர்ந்த ரவி (24) என்பவரையும் போலீசார் அவரது வீட்டில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.
கைதான இருவரிடமும் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், பெங்களூரு, மண்டியா, மைசூர் மற்றும் கோலார் ஆகிய பகுதிகளில் 11 பைக்களையும் 1 ஆட்டோவையும் திருடியதை ஒப்புக்கொண்டனர். திருடப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்காக மண்டியா மாவட்டம் சிவள்ளியில் உள்ள ஒரு பழைய ஆலை பகுதியிலும், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பி.எஃப். சாலையிலும் நிறுத்தி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார், அவற்றை பறிமுதல் செய்தனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம் ஸ்ரீராம்புரா காவல் நிலைய பைக் திருட்டு வழக்கு ஒன்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆட்டோ மற்றும் 10 பைக்குகளின் உரிமையாளர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீராம்புரா காவல் ஆய்வாளர் பூணச்சா தலைமையில், வட பகுதி துணை போலீஸ் கமிஷனர் பி.எஸ்.நேமகௌடா வழிகாட்டுதலின்படி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.













