Home செய்திகள் தேசிய செய்திகள் இந்து மதத்தை அவமானப்படுத்திய நபருக்கு ஓராண்டு சிறை

இந்து மதத்தை அவமானப்படுத்திய நபருக்கு ஓராண்டு சிறை

பாலி: ஆகஸ்ட் 25-
இந்தோனேசியாவின் பாலி தீவில் கடைப்பிடிக்கப்படும் இந்து சடங்கை மீறி, அதனை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 26 வயது சுவிஸ் சுற்றுலா பயணிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமைதியான நாள் என்ற இந்து பண்டிகையின் போது அவர் விதிகளை மீறியதாலும் அதை கிண்டல் செய்யும் விதமாக சமூக வலைத்தளங்களில் போஸ்ட் பதிவிட்டதாலும் இப்போது ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்கிறார். தென்கிழக்கு ஆசியாவில் உள்ள முக்கியமான தீவு நாடு இந்தோனேசியா. முஸ்லீம் பெரும்பான்மையாக உள்ள இந்தோனேசியாவில் பாலி தீவு மட்டும் இந்துக்கள் அதிகம் உள்ள தீவாகும். அங்கு இந்து கலாச்சாரம் கடுமையாக பின்பற்றப்படும். அதை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது இந்தோனேசியாவின் பாலி தீவில் நடந்துள்ளது. நியேபி என்பது பாலி மக்களால் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் முக்கியமான இந்து பண்டிகையாகும். இதற்கு “அமைதியின் நாள்” என்று பொருளாகும். அன்றைய தினம் மக்கள் அமைதியாக இருப்பார்கள். உண்ணாவிரதம் மற்றும் தியானத்தில் ஈடுபடுகின்றனர். நியேபி தினத்தின்போது பாலி தீவே முழுமையாக முடங்கும். மக்கள் 24 மணி நேரம் வீடுகளுக்குள் இருக்க வேண்டும்.ஆனால், இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் மீறும் வகையில் லுசியான் கடற்கரைக்கு போய் இருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலா பயணி லுசியான் பாலி மக்களை புண்படுத்தியதாகவும் பாலி மக்களின் நம்பிக்கையை அவமதித்து பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார். தன் செயலுக்காக வருத்தம் தெரிவித்த லூசியன், நியேபி தினத்தின் கட்டுப்பாடுகளின் தீவிரத்தை தான் புரிந்து கொள்ளவில்லை என்றும் பாலி மக்களையோ அவர்களின் சடங்குகளையோ அவமதிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவர் மேலும், “நான் செய்ததற்காக மிகவும் வருந்துகிறேன். பாலி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறினார். இருப்பினும், அதை ஏற்க மறுத்த நீதிபதி அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.