Home மாவட்டங்கள் சென்னை இளைஞர் கொலை: கடற்கரை மணலில் புதைத்த 2 பேர் கைது

இளைஞர் கொலை: கடற்கரை மணலில் புதைத்த 2 பேர் கைது

சென்னை, அக். 31- கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த எழில்செல்வியின் மகன் பிரசாந்த் (19). எழில்செல்வி சென்னையில் நடிகை ராதிகா வீட்டில் பணிப் பெண்ணாகப் பணியாற்றி வருகிறார். பிரசாந்த், தனது தாய்மாமன் ரமேஷுடன் சேர்ந்து வீடுகளுக்கு டைல்ஸ் போடும் வேலை செய்து வந்ததாகத் தெரிகிறது.
கடந்த 27-ம் தேதி சென்னையில் உள்ள தனது தாயைச் சந்திக்கச் செல்வதாக தாய்மாமன் ரமேஷிடம் கூறிவிட்டு பிரசாந்த் புறப்பட்டுச் சென்றார்.
மறுநாள் 28-ம் தேதி, தனது நண்பருக்கு வீடியோ கால் செய்த பிரசாந்த், தன்னை யாரோ அடிப்பதாகக் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ரமேஷ், கடலூர் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கடலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்தின் நண்பர் வேதராசுவின் மனைவியுடன் பிரசாந்துக்கு தவறான உறவு இருந்ததாகத் தெரியவந்தது.இதனால் ஆத்திரமடைந்த வேதராசு, தனது நண்பர் தினேஷுடன் சேர்ந்து பிரசாந்தை பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் கொலை செய்து, சடலத்தை மணலில் புதைத்ததாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து வேதராசு, தினேஷ் இருவரையும் கடலூர் போலீஸார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பின்னர் பழவேற்காடு அருகே உள்ள சாட்டாங்குப்பம் கடற்கரைப் பகுதியில், திருப்பாலைவனம் போலீஸாரின் உதவியுடன் மணலில் புதைக்கப்பட்டிருந்த பிரசாந்தின் சடலத்தை போலீஸார் கைப்பற்றினர். சடலம் உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலைச் சம்பவம் திருப்பாலைவனம் காவல் நிலைய எல்லைக்குள் நடைபெற்றதால், வேதராசு மற்றும் தினேஷ் மீது அந்தக் காவல் நிலைய போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.