
பெங்களூரு, நவ. 14-
கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி இ-கதா வழங்கியது தொடர்பாக, கே.ஆர். புரம் கோட்ட உதவி ஆணையர் பசவராஜ் என். மாகி உள்பட 31 பேர் மீது ஹலசூர் கேட் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் சிறப்பு ஆணையர் (வருவாய்) முனீஷ் மவுத்கில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர். வங்கிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த சிறப்பு வசதியைத் தவறாகப் பயன்படுத்தி, தகுதியற்ற சொத்துகளுக்கு இ-கதா அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொதுவாக, நிதிச் சொத்துக்களைப் பத்திரப்படுத்துதல், மறுகட்டமைப்பு செய்தல் மற்றும் பாதுகாப்பு நலன்களை அமல்படுத்துதல் சட்டம் (சர்பேசி சட்டம்) கீழ், கடன் திருப்பிச் செலுத்தப்படாத சொத்துக்களை வங்கிகள் கையகப்படுத்தி ஏலம் விடும் சமயங்களில் இ-கதா பெறுவதற்குச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த வசதியைச் சில அதிகாரிகள், கட்டிட கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களுடன் சேர்ந்து தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
விதிமுறைகளின்படி சமர்ப்பிக்கப்பட வேண்டிய சர்பேசி சட்ட உத்தரவு அல்லது விற்பனைச் சான்றிதழுக்குப் பதிலாக, சாதாரண விற்பனைப் பத்திரம், கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தம் உள்ளிட்ட பிற ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களின் அடிப்படையில், தகுதியற்ற மனைகள் மற்றும் கட்டிடங்களுக்கு இ-கதா வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கே.ஆர். புரம் கோட்ட உதவி ஆணையரும், பொறுப்பு வருவாய் அதிகாரியுமான பசவராஜ் மாகி மீது முக்கியக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2026-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி முதல் ஜூன் 19-ம் தேதி வரை அவரது உள்நுழைவு (லாகின்) மூலமாக ஹொரமாவு மற்றும் கே.ஆர். புரம் பகுதிகளில் உள்ள 98 தகுதியற்ற சொத்துகளுக்கு இ-கதா வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குற்றச் சதி, மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் அவற்றை உண்மையான ஆவணங்களைப் போலப் பயன்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், பாரதிய நியாய சன்ஹிதாவின் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, கெங்கேரி கோட்ட உதவி ஆணையர் லோகமாதா டி.எஸ். மற்றும் பசவராஜ் மாகி ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்யப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், இ-கதா முறைகேட்டில் தொடர்புடைய மற்றவர்களின் பங்கு குறித்தும் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.













