Home செய்திகள் தேசிய செய்திகள் மாசுபட்ட 100 நகரங்களில் 93 இந்திய நகரங்கள்

மாசுபட்ட 100 நகரங்களில் 93 இந்திய நகரங்கள்

புதுடெல்லி: நவ. 14-
உலகின் மாசுபட்ட நகரங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முதல் 100 நகரங்களில் 93 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை எனத் தெரியவந்துள்ளது. இவற்றில் பெரும்பாலான நகரங்கள் வடஇந்திய மாநிலங்களில் அமைந்துள்ளன. முதல் 10 இடங்களிலும் பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நகரங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளன.
முதல் 10 இடங்களில் பாகிஸ்தானின் லாகூர் நகரத்தைத் தவிர, மீதமுள்ள 9 இடங்களையும் இந்திய நகரங்கள் பிடித்துள்ளன. ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர், உலகின் மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் பரித்கோட், பதிண்டா, அரியானாவின் சிர்சா, பிவானி, உத்தர பிரதேசத்தின் புதோன், அரியானாவின் ஹிசார், பஞ்சாபின் அமிர்தசரஸ், பாகிஸ்தானின் லாகூர் மற்றும் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன.
இந்தப் பட்டியலில் தலைநகர் டெல்லி முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறவில்லை. அது 15-வது இடத்தில் உள்ளது. தீபாவளி பண்டிகைக்குப் பிறகு வடஇந்திய மாநிலங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பல நகரங்கள் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, மற்றொரு அறிக்கையில் தீபாவளிக்குப் பிறகு உலகின் மாசுபட்ட 100 நகரங்களில் 99 நகரங்கள் இந்தியாவில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான பட்டியலிலும் முதல் 100 இடங்களில் 93 இந்திய நகரங்கள் இடம்பெற்றிருப்பது, குறிப்பாக வடஇந்திய நகரங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதை வெளிப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.