Home மாவட்டங்கள் சென்னை விஜய்க்கு ஸ்டாலின் கடிதம்

விஜய்க்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: நவ. 14-
“மேகேதாட்டு அணை கட்டுவது குறித்து கர்நாடக முதல்வர் மீண்டும் தீவிரமாகப் பேசத் தொடங்கி இருக்கும் சூழ்நிலையில், இனியும் தமிழ்நாடு அரசு மவுனம் காக்கக் கூடாது என்றும், நமது ஒற்றுமையையும் கர்நாடக முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்,” என்று தமிழக முதல்வர் விஜய்யை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமா, 13-11-2026 அன்று மைசூரில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், மேகேதாட்டு அணை குறித்து மீண்டும் பேசியுள்ளார். கர்நாடகத்தில் மேகேதாட்டு அணையைக் கட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே தெரிவித்திருப்பதாகவும், இதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் அந்த நிகழ்ச்சியில் டி.கே. சிவகுமார் பேசியுள்ளது தமிழ்நாட்டு விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதைத் தங்களது கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
காவிரி என்பது நீர்ப்பங்கீடு என்பதைத் தாண்டி, வரலாற்றுப்பூர்வமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது ஆகும். டெல்டா விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் இதனை நம்பித்தான் இருக்கிறது. எனவே, மேகேதாட்டு அணை குறித்து தமிழ்நாடு அரசு கண்டும் காணாமல் இருக்க முடியாது என்பதை நான் முதலில் இருந்தே தொடர்ந்து வலியுறுத்தி வருவதை இந்த நேரத்தில் மீண்டும் நினைவூட்டுகிறேன்.
கடந்தகாலப் படிப்பினைகளின் அடிப்படையில், காவிரி நீர் உரிமை தொடர்பாக கர்நாடகத்துடன் எந்தவிதப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை. சட்டப்பூர்வமாகத்தான் நமது உரிமையைப் பெறுவோம் என்பதே தமிழ்நாட்டின் நிலைப்பாடாக இருந்து வந்தது. இதனை மீறும் வகையில், தாங்கள் முதல்வராகப் பொறுப்பேற்றதும் கர்நாடகம் சென்று இதுதொடர்பாக அம்மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகச் செய்திகள் வந்தபோதே, ‘வேண்டாம் இந்த விஷப்பரீட்சை’ என எச்சரித்தோம்.
தமிழ்நாடு முதல்வராகிய தாங்கள் கர்நாடகம் செல்வது பற்றி வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வராத நிலையில் அமைச்சர்கள் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்து விவசாயப் பெருமக்களைக் குழப்பி வந்தனர்.
இந்த நிலையில்தான், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரே ஒரு செய்தியாளர் சந்திப்பில், “தமிழ்நாடு அரசு சார்பாகத்தான் பேச்சுவார்த்தைக்கு அணுகினார்கள். கர்நாடகம் அணுகவில்லை” என்பதைத் தெரிவித்தார். கடைசியில், கர்நாடகத்தில் உள்ள சில அமைப்புகள் தெரிவித்த எதிர்ப்புக்கு அடிபணிந்து, “தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழ்நாடு முதல்வர் கர்நாடகத்துக்கு வரவேண்டாம்” என்று கூறிவிட்டார். இந்த நிகழ்வுகள் எதுவுமே தமிழ்நாட்டு மக்களுக்கு உவப்பானதாக இல்லை.
காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் பேசி வரும் நிலையில், நமது விவசாயிகளைக் காப்பதற்காகத் தமிழ்நாட்டின் கட்சிகளும் நமது ஒற்றுமையை வெளிப்படுத்துவது அவசியம் என்பதை நான் வலியுறுத்தி, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி நமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்பதையும் தெரிவித்திருந்தேன்.
மேகேதாட்டு அணை கட்டும் பிரிச்னையை நடுவர் மன்றத்துக்கு அனுப்ப வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றிய போது, பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும் என்பதைச் சட்டமன்றத்திலேயே வலியுறுத்தி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் மூலம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பிரதமரிடம் அளிப்போம் என்றும் தெரிவித்தார்.
கர்நாடக முதல்வர் மேகேதாட்டு அணை கட்டுவது குறித்து மீண்டும் தீவிரமாகப் பேசத் தொடங்கி இருக்கும் சூழ்நிலையில், இனியும் தமிழ்நாடு அரசு மவுனம் காக்கக் கூடாது. எனவே, நமது ஒற்றுமையையும் கர்நாடக முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று இக்கடிதத்தின் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும், மேகேதாட்டு அணைக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜூன் மாதம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தையும், தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றக் கட்சித் தலைவர்களும் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து பிரதமரை நேரில் சந்தித்து அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். காவிரி உரிமையைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும் கட்சி வேறுபாடுகளையும் கடந்து நாம் ஒற்றுமையாக நிற்பது அவசியம். தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகள் மற்றும் வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கைக்குச் செவிசாய்த்து, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் என்று நம்புகிறேன்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.