Home செய்திகள் தேசிய செய்திகள் விமான சேவைகள் தற்காலிக நிறுத்தம்

விமான சேவைகள் தற்காலிக நிறுத்தம்

புதுடெல்லி: நவ. 14-
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் பதற்றமான சூழல் காரணமாக, சவூதி அரேபியாவின் ரியாத், தம்மாம், ஜெட்டா ஆகிய நகரங்களுக்கான விமானச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்துவதாக ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் நவம்பர் 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஜெட்டா நகருக்கான விமானச் சேவைகள் நவம்பர் 21-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகின்றன. முன்னதாக, இண்டிகோ விமான நிறுவனமும் ஜெட்டா, மதீனா நகரங்களுக்கான விமானச் சேவைகளை நவம்பர் 21-ஆம் தேதி வரையும், ரியாத், தம்மாம் நகரங்களுக்கான சேவைகளை நவம்பர் 30-ஆம் தேதி வரையும் ரத்து செய்துள்ளது. நவம்பர் 10-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு சில சலுகைகள் வழங்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. ரியாத், தம்மாம் பயணிகள் டிசம்பர் 14-ஆம் தேதி வரையிலும், ஜெட்டா பயணிகள் டிசம்பர் 5-ஆம் தேதி வரையிலும் கூடுதல் கட்டணம் இன்றி பயணத் தேதியை மாற்றிக்கொள்ளலாம். மேலும், சவூதி அரேபியா அல்லது பஹ்ரைனில் உள்ள பிற செயல்பாட்டு விமான நிலையங்களுக்கு பயணத்தை மாற்றியமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயணத்தை ரத்து செய்ய விரும்புவோருக்கு டிக்கெட் கட்டணம் முழுமையாகத் திரும்ப வழங்கப்படும். ஏர் இந்தியா உதவி எண்கள்: +91 11 69329333, +91 11 69329999. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உதவி எண்: +91 124 6935600.