Home விளையாட்டு ஈரான் போட்டியின் போது மைதானத்தில் வெடித்த போராட்டம்.. நியூசிலாந்துடன் டிராவில் முடிந்த ஆட்டம்

ஈரான் போட்டியின் போது மைதானத்தில் வெடித்த போராட்டம்.. நியூசிலாந்துடன் டிராவில் முடிந்த ஆட்டம்

லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூன் 16- 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் ஜி பிரிவின் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஈரான் அணி 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது. அரசியல் பதற்றங்கள் மற்றும் போராட்டங்களுக்கு இடையே அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சோஃபி மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி நடந்த போது மைதானத்திற்கு வெளியே 300 முதல் 500 போராட்டக்காரர்கள் திரண்டு தற்போதைய ஈரான் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். எனினும் போட்டி திட்டமிட்டபடி நடந்து முடிந்தது. பரபரப்புக்கு இடையே நடந்த இந்த ஆட்டத்தின் 7வது நிமிடத்திலேயே நியூசிலாந்தின் எலிஜா ஜஸ்ட் முதல் கோல் அடித்து அசத்தினார்.
கிறிஸ் வுட் கொடுத்த பாஸை அவர் கோலாக மாற்றினார். தொடர்ந்து 32வது நிமிடத்தில் ஈரானின் டிபெண்டர் ரமின் ரெசேயன் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார். இரண்டாவது பாதியின் 54வது நிமிடத்தில் எலிஜா ஜஸ்ட் தனது 2வது கோலை அடித்து நியூசிலாந்தை 2-1 என முன்னிலை பெறச் செய்தார். ஆனால், 64வது நிமிடத்தில் ஈரானின் முகமது மொஹெபி தலையால் முட்டி ஒரு கோல் அடிக்க, ஆட்டம் 2-2 என சமநிலையை எட்டியது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இப்போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஈரானுக்கு வெளியே அதிகப்படியான ஈரான் மக்கள் வாழும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இப்போட்டி நடந்ததால் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அரசியல் பதற்றம் நிலவியது. போட்டி தொடங்குவதற்கு முன் ஈரானின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது மைதானத்தில் இருந்த ரசிகர்களில் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். மைதானத்திற்குள் நுழைந்த ஈரான் ஆதரவாளர்கள் பலர், தற்போதைய ஈரான் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், புரட்சிக்கு முந்தைய காலத்து ‘சிங்கம் மற்றும் சூரியன்’ சின்னம் பொறித்த கொடிகளை ஏந்தி வந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மைதானத்திற்கு வெளியே 300 முதல் 500 போராட்டக்காரர்கள் திரண்டு தற்போதைய ஈரான் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அரசியல் முழக்கங்கள் மற்றும் கொடிகளுக்கு பிபா தடை விதித்திருந்த போதிலும், இப்போட்டியில் ரசிகர்கள் தடையின்றி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இப்போட்டியை பிபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ நேரில் பார்வையிட்டார். முன்னதாக நடந்த குரூப் ஜி பிரிவின் மற்றொரு போட்டியில் பெல்ஜியம் மற்றும் எகிப்து அணிகள் 1-1 என டிரா செய்தன. இதனால் இக்குழுவில் உள்ள 4 அணிகளும் தலா 1 புள்ளியுடன் சமநிலையில் உள்ளன. அடுத்த போட்டியில் ஈரான் அணி பெல்ஜியத்தையும், நியூசிலாந்து அணி எகிப்தையும் எதிர்கொள்ள உள்ளன.