
பெங்களூரு: ஜூன் 16-
கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால், மாநிலம் முழுவதும் கடுமையான வறட்சி அபாயம் ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் பெய்ய வேண்டிய மழையின் அளவில், இதுவரை 21 சதவீதத்திற்கும் மேலாக மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது
மழை பொய்த்ததன் காரணமாக, கர்நாடகாவின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கும் 14-க்கும் மேற்பட்ட முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அணைகளில் உள்ள நீரின் இருப்பு மிகக் குறைந்த அளவே உள்ளது. இதே நிலை நீடித்தால், வரும் நாட்களில் விவசாயத்திற்கு மட்டுமின்றி, பொதுமக்களின் குடிக்கக் கூட தண்ணீர் கிடைக்காமல் ‘குடிநீர் தட்டுப்பாடு’ உச்சகட்டத்தை எட்டும் என அஞ்சப்படுகிறது.
மாநிலத்தில் வறட்சி நிலவரம் குறித்து துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் நேற்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
மாநிலத்தில் இன்னும் 30 சதவீத மழை கூட பெய்யவில்லை என்பதை அரசே ஒப்புக்கொண்டுள்ளது. நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும்போது, வெறும் ஏசி அறையில் அமர்ந்து ‘காடாச்சாரம்’ (கடமைக்காக) கூட்டம் நடத்துவதால் எந்த பயனும் இல்லை. ஊடகங்களுக்கு போஸ் கொடுப்பதை விடுத்து, வறட்சியை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்.” என டி.கே.சிவகுமாருக்கு சாட்டையடி கொடுத்துள்ளார். கர்நாடகாவில் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை தாமதமாகவும், பலவீனமாகவும் நுழைந்துள்ளதால் விவசாய பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் சூழலில், வறட்சி நிவாரணப் பணிகளில் அரசு மெத்தனமாக இருப்பதாக பாஜாக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இப்போதே தண்ணீர் லாரிகளின் தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது இதன் தீவிரத்தைக் காட்டுகிறது.


















