
லக்னோ, நவ. 8-
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் ஐந்து மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் ஆட்சியை பா.ஜ.க. தக்கவைத்துக் கொள்ளுமா என்ற சந்தேகம் டெல்லி அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது. சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் சமீபகாலமாக மக்களிடையே மீண்டும் பிரபலமடைந்து வருவதாகவும், இதனால் பா.ஜ.க.வுக்கு தேர்தலில் பெரும் சவால் ஏற்படலாம் என்றும் பேசப்படுகிறது.
இதுகுறித்து பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்து வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. தொடர்ந்து இருமுறை வெற்றி பெற வியூகம் வகுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தலுக்கு முந்தைய கடைசி வாரத்தில் தீவிர பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியும் பா.ஜ.க. சார்பில் உத்தரப் பிரதேசத்தில் 22 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியும் என்ற நம்பிக்கையில் பா.ஜ.க. உள்ளது. அதேவேளை, அக்கட்சியின் கூட்டணிக் கட்சிகள் கடந்த தேர்தலைவிட இந்த முறை கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வானும் கூட்டணியில் தமது கட்சிக்கு இடம் கோரியுள்ளார். லோக் ஜனசக்தி கட்சி பீகாரைச் சேர்ந்ததாக இருந்தாலும், இந்த முறை உத்தரப் பிரதேசத்தில் போட்டியிட சிராக் பாஸ்வான் விரும்புகிறார். கூட்டணியில் இடம் வழங்கப்படாவிட்டால், 403 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என அவர் அறிவித்துள்ளார். மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி இத்தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளது. இது பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமையும் என கூறப்படுகிறது. இதற்கிடையே, தொகுதிப் பங்கீடு தொடர்பாக அகிலேஷ் யாதவுக்கு காங்கிரஸுடன் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. “காங்கிரஸால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை; அது எங்களுக்கு ஒரு சுமைதான்” என அகிலேஷ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச தேர்தல் களம் பரபரப்பாகி வரும் நிலையில், காங்கிரஸின் செயல்பாடு தென்படவில்லை.













